Tuesday 14 June 2022

சுல்தான் சொல்லுவது சரியே!


 ஜொகூர் சுல்தான், மத்திய அரசாங்கம் ஜொகூர் மாநிலத்தை மாற்றாந்தாய் போன்று நடத்துவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஜொகூர் சுல்தான் மத்திய அரசாங்கத்தின் மீது இதே போன்ற குற்றச்சாட்டுகளை இதற்கு முன்னரும் வைத்திருக்கிறார் என்பதும் நினைவு கூறத்தக்கது.

அவருடைய குற்றச்சாட்டுகள் தவறு என்று சொல்ல இடமில்லை.  மத்திய அரசாங்கத்தின் தவறான கொள்கைகளினால்  பொதுவாக பல பிரச்சனைகளில் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். இது ஜொகூர் மட்டும் அல்ல மற்ற மாநிலங்களிலும் உள்ள நிலைமை.

ஜொகூர்  சுல்தான் தனது மாநில நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்றாலும் மற்ற மாநிலங்களிலும் இதே நிலைமை தான். மற்ற மாநிலங்கள் வாய் திறக்கவில்லை. அதற்குப் பல காரணங்கள் உண்டு.  ஆனால் ஜொகூர் சுல்தான் அவரால் சும்மா பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. தனது மாநிலம், தனது குடிமக்கள் என்கிற உரிமையோடு அவர் பேசுகிறார். அதனை நாம் எப்படி தவறு என்று சொல்ல முடியும்!

பொதுவாக சொல்ல வேண்டுமென்றால்  இன்று நம்முடன் பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகள் யாருக்கும் நாட்டுப்பற்று இருப்பதாகத் தெரியவில்ல. அல்லது மொழிப்பற்று, இனப்பற்று - இப்படி எதுவுமே இல்லாத ATM இயந்திரங்களாக மாறிவிட்டனர்! பணம் கிடைத்தால் நாட்டையே விற்றுவிடக் கூடிய அரசியல்வாதிகள் தான் இன்று நமக்குத் தலைமை தாங்குபவர்களாக இருக்கின்றனர்.

அடுத்த மாதம் கோழி விலை ஏறுகிறது, முட்டை விலை ஏறுகிறது, பெட் ரோல் விலை ஏறுகிறது, காய்கறிகள் விலை ஏறுகிறது -இதைச் சொல்லுவதற்குத்தான்  இவர்கள் அமைச்சர்களாக இருக்கிறார்களா? விலைகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும், உள்நாட்டு உற்பத்திகளைப் பெருக்க வேண்டும் - மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பது ஆட்சியாளர்களின் கடமை. அரசியலரின்  நோக்கம் மாறிவிட்டது.  வருமும் காப்போம் என்பதைவிட வந்தபின் காப்போம் என்பது  அவர்களுடைய  நோக்கமாக மாறிவிட்டது.

இன்றைய அரசியலர்களைத் தட்டிக்கேட்க ஆளில்லை. ஜொகூர் சுல்தான் அவ்வப்போது அவர்களுக்குப் புத்திமதிகள் கூறிக்கொண்டிருக்கிறார். மற்ற மாநில சுல்தான்களும் பிரச்சனைகளைக் கையில் எடுக்க வேண்டும். அரசியல்வாதிகள் தங்களது கடமைகளைச் செய்யும்படி மாநில ஆட்சியாளர்கள் தூண்டுகோளாக இருக்க வேண்டும்.

அரசியல்வாதிகள் திருந்த வேண்டும்! இல்லாவிட்டால் திருத்தப்பட வேண்டும்!

No comments:

Post a Comment