பினாங்கு பயனீட்டாளர் சங்கம். சரியான நேரத்தில் மக்களுக்குத் தேவையான கருத்துக்களை வெளியிட்டிருக்கிறது
அதன் கல்விப்பிரிவு தலைவர், என்.வி.சுப்பராவ், மக்களுக்கு சில அறிவுரைகளக் கொடுத்திருக்கிறார். காயகறிகளின் விலைகளின் ஏற்றம் கிடுகிடு என உயர்ந்து கொண்டே போகின்றன. விலைகள் குறையும் என்பதற்கான அறிகுறிகளும் இல்லை. எப்படியும் சீனப் பெருநாள் வரை இந்த நிலை நீடிக்கும் என்கிறார் சுப்பராவ். சீனப் பெருநாள் அடுத்த ஆண்டு 1, பெப்ரவரி மாதத்தில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை காய்கறிகளின் விலை எந்த அளவுக்கு உயரும் என்று நம்மால் கணிக்க முடியவில்லை.
அதற்கான ஒரு தீர்வைத் தான் பயனீட்டாளர் சங்கம் கூறியிருக்கிறது. விலை ஏறுகிறது என்று சொல்லிக் கொண்டிருப்பதில் பயனில்லை. அந்த விலையேற்றத்தை எப்படி சமாளிக்கலாம் என்பதற்கான சில அலோசனைகளை சங்கம் வெளியிட்டிருக்கிறது.
உங்களின் வீட்டைச் சுற்றி ஏதாவது ஒரு சிறிய இடமிருந்தாலும் அங்கே காய்கறிகளைப் பயிரிடுங்கள் என்பது தான் அவர்களின் அறிவுரை. அதன் மூலம் உங்களுக்கான தேவைகளை ஓரளவாவது பூர்த்தி செய்து கொள்ளலாம். உடனடியாகப் பலன் தரும் சில கீரைவகைகளை நாமே பயிர் செய்து பயன் பெறலாம்.
பஞ்ச காலத்தில், ஒரு முருங்கை மரம் இருந்தால், ஓரு குடும்பத்தின் பசியைத் தீர்க்கும் என்பதாகச் சொல்லப்படுவது உண்டு. நாம் இன்னும் பஞ்சம் என்கிற அளவுக்கு வரவில்லை என்றாலும் வருங்காலங்களில் எதுவும் நடக்கலாம். ஒரு முருங்கை மரத்தின் பயன் என்பது நீண்ட காலத்திற்கு நீடிக்கும். கோவிட்-19 காலத்தில் வீட்டை விட்டு வெளியே போக முடியாத சூழலில் எங்களுக்கு முருங்கை மரம் தான் துணை!
அவசர காலத்தில் சிறிய பயிர்கள் தான் நமது பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமையும். அது உடனடியான பலனைக் கொடுக்கும். அதிகமான இடங்கள் தேவை இல்லை. கொஞ்ச முயற்சிகள் எடுத்தால் என்ன என்ன பயிரிடலாம் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நாம். விவசாயம் நமக்கு என்ன புதிதா?
உடனடியாகப் பலன் தரும் பயிர்களின் பட்டியலை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வெளியிட்டு இருக்கிறது. அதற்கான பயிற்சிகளையும் அவர்கள் கொடுக்கிறார்கள். குடும்பப் பெண்கள் ஆண்கள் அக்கறை உள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைத் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.
அவர்களது அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம் அல்லது நேரடியாக சுப்பராவ் அவர்களை 012-5374899 என்னும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இது ஒரு முன் எச்சரிக்கை. அவ்வளவு தான்!
No comments:
Post a Comment