Saturday 18 June 2022

தோல்வியா? அடுத்தது வெற்றி!

 


தோல்வி என்பது  மனதில்  விழுந்த முதல் அடி என்பதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.  அது தான்  வெற்றிக்கான  முதல் படி.

SPM தேர்வில் தோல்வி அடைந்தவர்களின் வலி என்ன என்பது நமக்குப் புரிகிறது. ஆனால் அதுவே முடிந்த முடிவு  அல்ல. இன்னும் வயதிருக்கிறது. இன்னும் எத்தனையோ படிகளைக் கடக்க வேண்டியுள்ளது. அதுக்குள்ளே சோர்வு ஏற்பட்டுவிடக் கூடாது. மாணவர்களுக்கு அது முக்கியம்.

இன்றைய தோல்வி நாளைய வெற்றி என்று எடுத்துக் கொண்டு அடுத்த வேலையைப் பார்க்க வேண்டியது தான். இந்த நேரத்தில் பெற்றோர்களின் அரவணைப்பு என்பது மாணவர்களுக்கு மிக முக்கியம். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது பெற்றோர்களின் வேலை இல்லை.

கல்வியில் ஓர் ஆண்டு பின் தங்கி விட்டால் அது ஒன்றும் தலை போகும் காரியமல்ல. எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பின் எவ்வளவோ சாதிக்கலாம். 

இன்று கல்வித்துறையில் வெற்றி பெற்றவர்கள் எல்லாம் தோல்வியே அடையாமல் அந்த இடத்தை அடைந்தவர்கள் என்று சொல்ல முடியாது. ஒரு சில தோல்விக்குப் பின்னர் தான் அவர்கள் கல்வியாளர்கள் என்கிற இடத்தைப் பிடித்திருக்கிறார்கள்.  அதில் வெட்கப்பட ஒன்றுமில்லை.

இன்று வெற்றிகரமான டாக்டர்கள், இன்று வெற்றிகரமான  வழக்கறிஞர்கள், இன்று வெற்றிகரமான பொறியிலாளர்கள் - இப்படி யாரை எடுத்துக் கொண்டாலும்  அன்று ஒரு நாள் தோல்வியைச் சந்தித்தவர்களாகத் தான் இருப்பார்கள்! ஆனால் இன்று அவர்கள் பெற்றிருக்கின்ற வெற்றி அன்று பெற்ற அந்த தோல்வியை யாரும் நினைத்துக் கூட பார்ப்பதில்லை. . எல்லாவற்றையும் போல தோல்வி என்பது வாழ்க்கையின் ஓர் அங்கமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

கல்வியில் தோல்வி அடையாதார் என்பதாக யாருமில்லை.  எப்போதோ எங்கோ சறுக்கியிருப்பார்கள். அவைகளை எல்லாம் கடந்து தான் அடுத்தக் கட்டத்துக்கு நாம் நகர வேண்டும்.

நமது நோக்கம் என்பது பெரிது. கல்வியில் வெற்றி பெற வேண்டும். இந்தக் காலகட்டத்தில்  நம் குடும்பங்களில் பட்டதாரிகளை உருவாக்குவது  நமது கடமை.  குறைந்த கல்வி நம்மை எங்கும் கொண்டு செல்லாது. பின் தங்கியவர்களாகவே நாம் பார்க்கப்படுவோம்.

அதனால் ஒருமுறை தோல்வி என்பது தலைபோகின்ற காரியமல்ல. வெற்றி என்றால் மகிழ்ச்சி. வெற்றி பெறவில்லை என்றாலும் மகிழ்ச்சி தான். காரணம் அத்தோடு அனைத்தும் முடிந்து விடுவதில்லை. இருக்கவே இருக்கிறது அடுத்த முயற்சி. அடுத்த முறை வெற்றி பெற்றால் மகிழலாமே!


No comments:

Post a Comment