Tuesday 7 June 2022

நான் செய்ய நினைத்ததெல்லாம்!

 


"எனக்குப் பிடித்ததை என் இளம் வயதில் செய்ய முடியவில்லை. நான் யார் யாரையோ சந்தோஷப்படுத்த வேண்டிய நிலையில் இருந்ததால் வேண்ட வெறுப்பாகவே நான் விரும்பாத வேலையைச் செய்து வந்தேன்.  இப்போது ஓய்வு பெற்ற நிலையில், பெரிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை என்றாலும், ஏதோ சிறிதாக நான் விரும்பியதைச் செய்கிறேன்."

இப்படி சொல்பவர்கள் பலர் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு சிலர் கடைசி வரை  அவர்கள் விரும்பியதை செய்யாமலேயே போய்ச் சேர்ந்து விட்டார்கள்! பல காரணங்கள். அது தாங்கள் வகித்த பதவிக்கு இழுக்கு என்று நினைப்பவர்கள் உண்டு.

அந்த வகையில் நமது முன்னாள் போலிஸ் படைத்தலைவர்  டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் கொஞ்சம் வித்தியாசப்படுகிறார். ஓராண்டுக்கு முன்னர் தான் அவர் காவல்துறையிலிருந்து ஓய்வு பெற்றார். ஓய்வுபெறும் போது 'நான் விவசாயத்தில் ஈடுபடுவேன்'  என்று ஒரு நேர்காணலின்  போது அவர் கூறியிருந்தார். கிராமப்புறத்திலிருந்து வந்தவர்களுக்கு  விவசாயம் இரத்தத்தில் ஊறிப்போனது.

அவர் சமீபத்தில் பொது சந்தை ஒன்றில்  காய்கறி வியாபாரம் செய்யும் படம் ஒன்று வைரலாகியிருக்கின்றது!  எந்த கூச்சமோ, தயக்கமோ, பதட்டமோ எதுவும் இல்லாமல்  அவர் அந்த படத்தில் காணப்படுகிறார்! அது பொதுவாக அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது!

இப்படி ஒரு குணாதிசயம் கொண்டுள்ள மனிதர்கள் வெகு சிலரையே நாம் பார்க்கின்றோம்.

சில மாதங்களுக்கு முன்னர்  நெதர்லாந்து நாட்டில்  இப்படி ஒரு சம்பவம் நடந்தேறியது. நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்,  தனது வீட்டிலிருந்து சைக்கிள் ஒன்றில்  ஒரு பேரங்காடிக்குக் கையில்   பையோடு பொருள்கள் வாங்கச் செல்கின்றார்! மற்ற சராசரி மனிதர்களோடு அவரும் ஒரு சராசரி மனிதனாகவே நடந்து கொள்கிறார்! இப்படியெல்லாம் ஒரு காட்சியை நாம் எந்தக் காலத்தில்  எங்கு பார்த்திருக்கிறோம்!

இப்படியெல்லாம் உயர்ந்த குணம் உள்ளவர்கள் உலகெங்கிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். நமது நாட்டிலும் பலர் இருக்கத்தான் செய்வர். நம் கண்ணுக்குத்தான் அகப்படுவதில்லை!

இதில் என்ன பாடத்தை நாம் கற்றுக் கொள்கிறோம்?  நாம் விரும்புகின்ற ஒரு காரியத்தை நமது இளமைகாலத்தில் நம்மால் செய்ய முடியவில்லை. அதனாலென்ன?   நாம் ஓய்வு பெறும்போது நம்மால் எந்த அளவுக்கு செய்ய முடியுமோ  அந்த அளவுக்குச் செய்துவிட்டு நாமே திருப்தி அடைந்து கொள்ள வேண்டியது தான்! தேவை எல்லாம் கூச்சத்தை மூட்டைக்கட்டிப் போட்டுவிட வேண்டும்! அவ்வளவு தான்!

No comments:

Post a Comment