பெருநாள் விடுமுறை ஆரம்பம்.
ஆமாம்! மலேசியாவில் ஹரிராயா ஆட்டம். மக்கள் தங்களது ஊருக்குத் திரும்புகின்றனர். ரோடுகளில் கார்களின் எண்ணிக்கை அமர்க்களப்படுகிறது.
சுமார் இருபது இலட்சம் கார்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் என்று கணக்கிடப்படுகின்றது. அதுவும் இந்த ஆண்டு சில சலுகைகளையும் பிரதமர் அறிவித்திருக்கிறார். நான்கு நாள்களுக்கு வழக்கமான சாலைவரிகள் இல்லை.அதோடு நான்கு நாள்களுக்கு அரசாங்க விடுமுறை.
இரண்டு, மூன்று ஆண்டுகள் கொரோனாவின் பாதிப்பினால் கிராமங்களுக்குச் செல்வது அல்லது தங்கள் சொந்த ஊரூக்குப் போவது என்பதெல்லாம் தடங்களுக்கு உள்ளாகிவிட்டன. விடுமுறைகளைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. அதற்குத் தான் இந்த ஆண்டு எல்லாவற்றுக்கும் பழிவாங்கும் ஆண்டாக மாறிவிட்டது! சென்ற ஆண்டுகளில் சாக்குப்போக்குச் சொல்லலாம். இந்த ஆண்டு அது தான் இல்லை.
இந்த ஆண்டும் ஒரே ஒரு கட்டுப்பாடு உண்டு. கூட்டம் சேரும் போது முகக்கவசம் அணியுங்கள் என்று சுகாதார அமைச்சு கூறியிருக்கின்றது. அதனை இப்போது யாரும் கடைப்பிடிப்பது இல்லை. முகக்கவசம் மீது யாரும் அக்கறைக் காட்டுவதுமில்லை. ஆனால் "பட்டுச்சினா?" பட்டதுதான்! அப்போது "நான்!" "நீ!" என்று சுட்டுவிரலைச் சுட்டுவது யாருக்கும் பயன் இல்லை! ஆனாலும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள் என்று மட்டும் தான் நம்மால் சொல்ல முடியும்.
ஹரிராயாவுக்கு என முக்கியமான செய்தி ஒன்று உண்டு. மகிழ்ச்சியாக, குடும்பத்தோடு உங்கள் ஊரூக்குப் போகின்றீர்கள். அந்தப் பயணம் மகிழ்ச்சியாக அமைய வேண்டும். அது முக்கியம். பல நாள் சந்திக்க முடியாதவர்களை, இதோ! இப்போது சந்திக்கப் போகிறீர்கள். உறவுகளைப் புதுப்பிக்கப் போகிறீர்கள். சந்தோஷம்! மகிழ்ச்சி! அனைத்தும் தான்!
அந்த மகிழ்ச்சி நல்ல முறையில் அமைய வேண்டும். உங்கள் வாகனங்களை முறையாகப் பயன்படுத்துங்கள். அதிவேகம் வேண்டாம். வேகம் முக்கியமல்ல. விவேகம் தான் முக்கியம். குடும்பம் தான் முக்கியம். காரிலுள்ள உங்கள் குடும்பம் முக்கியம். அதே போல உங்களுக்காக காத்துக் கிடக்கும் உங்கள் உறவுகளும் முக்கியம். யாரையும் நாம் அலட்சியப்படுத்திவிட வேண்டாம்.
காரில் போகும் போது நாம் போகும் வேகம் கூட நமக்குத் தெரிவதில்லை. எல்லாமே சாதாரணமாகத் தான் தெரியும். பார்த்து, நிதானமாக உங்கள் வாகனங்களைப் பயன்படுத்துங்கள்.
நிதானம்! நிதானம்! நிதானம்! என்பது தான் நமது செய்தி!
No comments:
Post a Comment