நாம் பொதுவாக அழைக்கும் மேகி மீ மீண்டும் பிரச்சனைக்கு உள்ளாகி இருக்கிறது.
இது மேகி மீ அல்ல என்பதை தெளிவு படுத்துகிறேன். வேறு இரண்டு வகையான மீ வகைகள். ஒன்று மலேசியா இன்னொன்று இந்தோனேசியா. இரண்டு வகைகளிலும் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனம் கலந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
அந்த இரண்டு வகையான மீ வகைகள் இதோ: 1) Ah Lai White Curry Noodles from Malaysia 2) Indomie: Special Chicken Flavour from Indonesia. இந்த இரண்டு மீகளும் இங்கு விற்பனையில் உள்ளன.
இந்த இரண்டு மீ வகைகளிலும் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயன கலப்பு இருப்பதாக தைவான், தைப்பே சுகாதார அமைச்சு கண்டு பிடித்துள்ளதாகத் தெரிகிறது. அதனால் தைவான் உடனடியாக அந்த இரண்டு மீ வகைகளின் விற்பனையைத் தடைசெய்திருக்கின்றது.
நமக்குள்ள வியப்பு எல்லாம் அதெப்படி இன்னொரு நாட்டில் அந்த இரசாயன கலப்பைக் கண்டுபிடிக்க முடிகிறது. ஆனால் நம் நாட்டில் அது கண்டுபிடிக்க முடியவில்லையே ஏன் என்று கேள்வி கேட்கத் தோன்றுகிறது. இப்போது செய்திகள் வந்த பின்னர் தான், இனி மேல் தான், இவர்கள் ஆராய்ச்சி செய்து உண்மையைக் கண்டுபிடிக்கப் போகிறார்களாம்! இருக்கட்டும். அப்படியென்றால் இத்தனை மாதங்களாக, ஆண்டுகளாக இந்த இரண்டு மீகளையும் சாப்பிட்டு வந்தோமே அதற்கு யார் பொறுப்பு? ஏன் நம் நாட்டில் இதனைக் கண்டுபிடிக்கும் அளவுக்கு நவீன தொழில்நுட்ப வசதிகள் இல்லையோ?
மற்ற நாடுகள் சொல்லித்தான் நாம் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் நமது சுகாதார அமைச்சு தனது கடமையைச் சரியாகச் செய்யவில்லை என்பது தான் பொருள். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னரும் இதே பிரச்சனைத் தலைதூக்கியது. அப்போதும் வேறொரு நாடு அது பற்றி கேள்வி எழுப்பியது.
இப்போது நமது பிரச்சனை எல்லாம் யாராவது இது போன்ற விஷயங்களைக் கண்டுபிடிக்க முடியாதவரை நாம் வழக்கம் போல புற்றுநோய்க்கான எல்லா ஏற்பாடுகளையும் நமது உடலில் செலுத்திக் கொண்டிருக்கிறோம். அரசாங்கம் எதனையும் செய்யவில்லை. மற்ற அரசாங்கங்கள் தான் செய்து கொண்டிருக்கின்றன என்பது தான் நமக்குத் தெரியவருகிறது!
தைவான் அரசாங்கத்தைப் பாராட்டுகிறோம். அவர்கள் தான் அந்த எச்சரிக்கையை நமக்குக் கொடுத்தவர்கள். நன்றி மறக்கக் கூடாது அல்லவா!
No comments:
Post a Comment