சிங்கப்பூரில் இன்னொரு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கான நேரம் காலம் வந்துவிட்டது.
தூக்குத் தண்டனை என்பது மிகவும் கடுமையான ஒன்று என்பதில் சந்தேகமில்லை. பல நாடுகள் தூக்குத் தண்டனையை ரத்து செய்துவிட்டன. ஆனால் சிங்கப்பூர் இன்னும் அதனை அமலில் வைத்திருக்கிறது.
அதற்காக சிங்கப்பூர் அந்தத் தண்டனையை அடாவடித்தனமாக இன்னும் வைத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்லுவதில் அர்த்தமில்லை. அவர்களுடைய நாட்டுக்கு எது நல்லது, எது கெட்டது என்பது அவர்களுக்குத் தெரியும்.
சிங்கப்பூர் ஒரு சிறிய நாடு. அங்கு கஞ்சா விற்பனையைக் கட்டுப்படுத்தாவிட்டால் கஞ்சாவை வைத்தே சிங்கப்பூரை அழித்து விடலாம். சிங்கப்பூரின் மக்கள் தொகை சுமார் 54 இலட்சம். அதனைப் புரிந்து கொண்டு தான் சிங்கப்பூர் இந்த கஞ்சா விஷயத்தில் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டி உள்ளது.
சிங்கப்பூருக்குக் கஞ்சா கடத்தினால் என்ன தண்டனை என்று தெரிந்தும் கஞ்சாவைக் கடத்திக் கொண்டு தான் இருக்கிறார்கள்! இது தான் ஆச்சரியம். கடத்துபவர்கள் எதற்கும் அஞ்சுபவர்களாகவும் தெரியவில்லை. ஆனால் சமயங்களில் அப்பாவிகளும் மாட்டிக் கொள்கின்றனர் என்பதையும் மறுப்பதற்கில்லை.
இந்த வியாபாரத்தில் பெரிய மீன்கள் மட்டும் மாட்டுவதில்லை. சில்லறைகளை வைத்துக் கொண்டு அவர்கள் பணம் பார்க்கிறார்கள்! பணம் உள்ளவன் எந்தக் காலத்திலும் சிக்குவதில்லை. அப்பாவிகள் தான் தங்கள் உயிரை இழக்கின்றனர்.
இதோ, இப்போது தூக்குக்குப் போக சிங்கப்பூரில் தமிழர் ஒருவர் தயார் நிலையில் இருக்கிறார். நாற்பத்தாறு வயதான தங்கராஜூ சுப்பையா குற்றவாளி என்பதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. கடைசி நிமிட வேலைகளும் அவரது குடும்பத்தினர் செய்து கொண்டு இருக்கின்றனர்.
பொது மக்களாகிய நம்மால் எதுவும் செய்ய இயலாது. கருணைக் காட்டுங்கள் என்று சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு, அந்தக் குடும்பத்தோடு சேர்ந்து, நாமும் கோரிக்கை விடுக்கலாம்.
அவருக்கு நல்லது நடக்க இறைவனை வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment