Wednesday 26 April 2023

தொழிலாளர் பற்றாக்குறை!

 

நம் நாட்டில் தொழிலாளர் பற்றாக்குறை என்பதாகத் தொடர்ந்து முதலாளிகள்  சொல்லி வருகின்றனர். அவர்கள் சொல்லுவதில் உண்மை இல்லாமல் இல்லை.

ஆனால் பற்றாக்குறை என்று சொல்லி எல்லாத் துறைகளிலும் வெளிநாட்டவர்களை வேலைக்கு அமர்த்துவது என்பது சரியானதாக நமக்குத் தோன்றவில்லை.

ஒரு சில துறைகளில் பற்றாக்குறை என்றால் அது உண்மை தான். குறிப்பாக கட்டுமானம், தோட்டத்துறை இப்படி சில  துறைகளில் பற்றாக்குறை என்பது யாரும் சொல்லாமலே நமக்குத் தெரியும். 

இந்தியர்களைப் பொறுத்தவரை உணவகத்துறையில் நீண்டகாலம் பற்றாக்குறை உள்ளது என்பது இந்திய உணவகங்களுக்குப் போகிறவர்களுக்குத் தெரியும்.   ஒரு சிறிய விலகல். இங்கு பற்றாக்குறை என்கிறார்கள் ஆனால் இங்கு பயிற்சி கொடுத்து சிங்கப்பூருக்கு அதே உணவகத் துறைக்கு  இளைஞர்களை அனுப்புகிறார்கள்! அங்கு வேலைக்குப் போகத் தயாராக இருக்கும் இளைஞர்கள் ஏன் இங்கே வேலை செய்யத் தயங்குகிறார்கள் என்பது தெரியவில்லை. ஆக, வெளிநாட்டில் எந்த வேலையாக இருந்தாலும் செய்யத்  தயார் என்பது தான் இளைஞர்களின் மனநிலை! 

மனிதவள அமைச்சு எல்லாத் துறைகளிலும் வெளிநாட்டவர்களை அமர்த்துவதற்கு  அனுமதி கொடுப்பது சரியாகத் தோன்றவில்லை. அது உள்நாட்டவர்களின் பிழைப்பில் மண்போடுவது ஆகாதா?  முதலாளிகள் சொன்னால்  உடனே அரசாங்கம் அனுமதி அளிப்பது சரியானதாகத் தோன்றவில்லை.

சான்றுக்கு நாட்டில் உள்ள பேரங்காடிகளில் நூறு விழுக்காடு வெளிநாட்டவர்களை வேலைக்கு அமர்த்துவது என்பது உள்நாட்டவர்களைப்  புறக்கணிப்பதற்குச் சமம். இன்றைய நிலையில் எந்த ஒரு வீடமைப்புப் பகுதிகளை எடுத்துக் கொண்டாலும்  அங்கெல்லாம்  பேரங்காடிகள் தங்களது கிளைகளை வைத்திருக்கின்றன. அதை நாம் வரவேற்கிறோம். ஆனால் அங்கு வேலை செய்பவர்களைப் பார்த்தால் ஒருவர் கூட உள்நாட்டவர் இல்லை. குறைந்தபட்சம் ஓர் இருபது, முப்பது விழுக்காடு உள்நாட்டவர்களை வேலைக்கு அமர்த்துவது முதலாளிகளின் கடமை. இது போன்று புறக்கணிப்புகளைச் செய்தால்  அவர்கள் எங்கே வேலைக்குப் போவார்கள்? 

அரசாங்கம் உள்நாட்டவர்களின் மீது கொஞ்சமாவது அக்கறைக் காட்ட வேண்டும்.  உள்நாட்டவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு  வெளிநாட்டவர்களை உள்நாட்டுக்குக் கொண்டு வருவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. இன்று இந்தியர்களில் பலருக்குச் சிங்கப்பூர் தான் வேலை வாய்ப்புகளைக் கொடுக்கிறது.

தொழிலாளர் பற்றாக்குறை என்பது எல்லாத் துறைகளிலும் இல்லை. எங்கு பற்றாக்குறை இருக்கிறதோ அங்கு மட்டும் அரசாங்கம் கவனம் செலுத்தினால் போதும். இல்லாவிட்டால் உள்நாட்டவர் நிலைமை பரிதாபத்திற்குரியதாக ஆகிவிடும்!

No comments:

Post a Comment