Thursday 27 April 2023

பொறுமை காக்க!

 

வியாபாரங்களில் ஈடுபடுபவர்கள் பொறுமை காப்பது மிக மிக அவசியம். 

சொல்லடிகள், கல்லடிகள், அவமானங்கள், அலட்சயிங்கள் இப்படி எது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் வரலாம். வரத்தான் செய்யும்.

"அக்கா நாசிலெமாக்" கடையில் ஏற்பட்ட தகராறைத் தான் சொல்லுகிறேன். அதனைத் தவிர்த்திருக்கலாம்.   ஆனால் ஏதோ ஒரு திட்டம் போட்டுத்தான் அதனைச் செய்திருக்கிறார்கள் என்பது புலனாகிறது.

சண்டையை ஏற்படுத்திவிட்டு  அந்த அக்காளைக் குறி வைத்தே விடியோவை எடுப்பதும், அந்த இன்னொரு பெண்மணியின் முகத்தைக் காட்டாததும் எல்லாம் திட்டமிட்ட செயல் என்றே தோன்றுகிறது. மோட்டார் சைக்கிளில் வந்த அவரின்  கணவரை தூரமே காட்டுவதும் ஏதோ ஒரு  பிரச்சனையைக் கிளப்பவே அவர்கள் வந்திருக்கின்றனர் என்பதும் புரிகிறது. அதே சமயத்தில் அந்தப் பெண்மணி குறுக்கே நின்றுகொண்டு அக்காவை வேலை செய்யாமல் தடுப்பதும் திட்டமிட்ட செயல் தான்.இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். அந்தப் பெண்மணி ஆங்கிலத்திலேயே பேசியதும் கூட அவர் தமிழர் அல்ல என்பதும் புரிகிறது. இதனை நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் "நண்டு கதையை" அடிக்கடி சொல்லி தமிழர்களைக் கேவலப்படுத்தூவதும்  நிகழ்வதுண்டு.  இந்த நண்டு என்பது தமிழர் அல்ல, தமிழர் என்று சொல்லும் பிறரைக் குறிப்பிடுகிறது.

எது எப்படி இருந்தாலும் அந்த நாசிலேமாக் அக்காள் மிகவும் பொறுமையைக்  கடைப்பிடித்தார் என்பதும் பாராட்டுக்குரியது. ஒரு வியாபாரிக்குத் தேவையான பொறுமை குணம் அவரிடம் உண்டு. இந்தப் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்ததாகவே  நாம் எடுத்துக் கொள்கிறோம். இதனால் யாருக்கும் இலாபமில்லை. நமக்குள்ளேயே ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வது பிறரின் கேலிக்கு உள்ளாக்கும் என்பதில் ஐயமில்லை.

இந்தச் சண்டையில் யார் சரி, யார் தவறு, யாரால் எவரால் இந்தப் பிரச்சனை ஏற்பட்டது என்பது நமக்குத் தெரியாது. நமக்குத் தெரிந்ததெல்லாம் வியாபாரம் செய்யும் இடத்தில் தகராறோ, சண்டையோ வேண்டாம்  அதை மட்டும் தான் நாம் வலியுறுத்துகிறோம்.

ஒருவர் கெட்டுப்போவதால் யாருக்கு என்ன பயன் என்பதை நமது சமுதாயம் சிந்திக்க வேண்டும்.  சமுதாயம் நல்ல நிலையில் இருந்தால் நம்மால் பிறருக்கு நல்லதைச் செய்ய முடியும். ஏற்கனவே நாம் குடிகாரச் சமுதாயம், குண்டர் கும்பல் சமுதாயம், ரௌடி சமுதாயம் என்று பெயர் எடுத்திருக்கிறோம்.

அது போன்ற எண்ணங்கள் நீக்கப்பட்டு நாம் வியாபாரம் செய்யும் சமுதாயம் என்று பெயர் எடுக்க வேண்டும் என்பதில் தான் நாம் இப்போது கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறோம். 

தயவு செய்து வியாபாரம் செய்பவர்களைக் கீழறுப்பு செய்யாதீர்கள் என்பதே நமது வேண்டுகோள்.

No comments:

Post a Comment