இன்று நாட்டில் பலவகையான ஏமாற்று வேலைகள் கொடிகட்டிப் பறக்கின்றன என்று சொல்லலாம்.
உண்மையைச் சொன்னால் காவல்துறையினரால் இந்த ஏமாற்று வேலைகளைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வர முடியவில்லை என்று தாராளமாகச் சொல்லலாம். இந்த ஏமாற்று வேலைகளின் மூலம் கோடிக்கணக்கான வெள்ளிகளை மலேசியர்கள் இழந்திருக்கின்றனர்; இழந்தும் வருகின்றனர்.
இந்த ஏமாற்று வேலைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் போது இப்போது புதுவிதமான முறையில் சமீபத்தில் ஒரு நிகழ்வு நடந்திருப்பதாக பெண்மணி ஒருவர் கூறியிருக்கின்றார். ஆமாம், ஏமாற்றுவதற்கு என்னன்னவோ வழிகளைப் பயன்படுத்தியவர்கள் இப்போது "பாஸாக்கடை" வரை வந்து விட்டார்கள்.
அவர்களது அழைப்பில் "நீங்கள் பாஸாக் கடைக்குப் பணம் கொடுக்க வேண்டும்" என்று கூறிவிட்டு "உங்களது அடையாளக்கார்டு எண் கொடுங்கள்" என்று ஒரு சில தகவல்களைக் கொடுக்கும்படி கேட்டிருக்கின்றனர். ஆனால் அந்தப் பெண்மணி அதற்குள் சுதாகரித்துக் கொண்டார். அவர்கள் கேட்ட தகவல்களைக் கொடுக்கவில்லை. கொடுத்திருந்தால் வங்கியில் இருந்த அவரது பணத்தைக் காலி பண்ணியிருப்பார்கள்!
ஆமாம் நண்பர்களே! மீண்டும் மீண்டும் நாங்கள் சொல்லுவது இதுதான். நமக்குத் தெரியாதவர்கள் இது போன்று அடையாளக்கார்டு எண், வங்கி கணக்கின் எண் - இப்படி எதையாவது கேட்டு, கொடுங்கள் என்றால் கொடுத்துவிடாதீர்கள். கொடுத்துவிட்டால் அத்தோடு வங்கியில் உள்ள உங்கள் பணம் மொத்தமாகக் காலியாகிவிடும்! அதுவும் ஒரு சில நிமிடங்களில் அனைத்தும் காலி!
ஒவ்வொரு நாளும் செய்திகள் வருகின்றன. படித்தவர்கள் தான் அதிகமாகப் பணத்தை இழக்கின்றனர். பத்திரிக்கைகளில் வரும் செய்திகளைப் படித்தால் இந்த நிலை அவர்களுக்கு வராது. பலர் தங்கள் வாழ்நாள் சேமிப்புகளை ஒரு சில நிமிடங்களில் இழந்து விடுகின்றனர்.
நானும் ஒவ்வொரு மாதமும் இவர்களிடமிருந்து அழைப்புகளைச் சந்திக்கிறேன். நான் அவர்களைச் சீண்டுவதில்லை. அழைப்பைத் துண்டித்து விடுவேன். ஆனால் அவர்கள் தங்களது முயற்சிகளைக் கைவிடுவதில்லை. அழைப்பு என்னவோ வந்து கொண்டே தான் இருக்கின்றது.
மீண்டும் சொல்லுகிறேன் உங்களிடம் உள்ள முக்கியமான தகவல்களை யாரிடமும் கொடுத்து விடாதீர்கள். ஒரு வேலைக்கு விண்ணப்பம் செய்தால் கூட மிகவும் கவனமாக இருங்கள். ஏமாற்று வேலைகளில் ஈடுபடுபவர்கள் தான் உங்களது முக்கியமான எண்களைக் கேட்பார்கள். அதுவும் வங்கியில் பணம் இருந்தால் கவனம்! கவனம்! கவனம்!
No comments:
Post a Comment