Thursday 13 April 2023

என்று தணியும் இந்த வெப்பம்?

"என்று தணியும் இந்த வெப்பம்?" என்று கேட்க வேண்டும் போல் தோன்றினாலும்  அட!  யாரைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்பது என்று இன்னொரு கேள்வியையும் கேட்க வேண்டியுள்ளது!

அட! பாவிகளா! இருந்த  மரங்களை எல்லாம் காலிபண்ணிவிட்டு இப்போது "குத்துதே! குடையுதே!"  என்று நம்மோடு சேர்ந்து காலிபண்ணியவர்களும்  புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஏன் மக்கள் கூட திட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்!

மரங்கள் இருந்தால் "உடனே வெட்டுங்கள்!" என்கிற உத்தரவு வந்துவடும். வெட்டிய பிறகு அவர்களுக்குச் சந்தோஷம். மக்களுக்கு  எரிச்சல்! என்ன செய்வது? அதிகாரம் தானே வெல்லும்!  அப்படித்தான் நாட்டில் இன்றைய நிலைமை!

நமது வீடுகளின் முன்னால் இப்போதெல்லாம் மரங்களை வைப்பதைக் கூட மக்கள் தவிர்க்கின்றனர்!  பூச்செடிகளை வைப்பதில் தவறு ஒன்றுமில்லை. முடிந்தவரை சிறியவகை மரங்களை ஒன்றிரண்டாவது வைக்கலாம். எங்கள் வீட்டின்  முன்னாலே ஒரு முருங்கை மரமும் ஒரு கருவேப்பிலை மரமும் நன்றாக நிழல் கொடுத்தன. . ஒரு சில காரணங்களால் அதனை வெட்டிவிட்டோம். இப்போது மீண்டும் துளிர்த்துக் கொண்டிருக்கிறது. வளரும் வரை இன்றைய வெப்பத்தைக் தாங்க வேண்டும்!

இன்று நாம் வாழும் தாமான்களில் ஏதாவது குளிர்ச்சி தெரிகிறதா?  மரங்களே இல்லாத இடங்களில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மரங்களே வேண்டாம் என்கிற காலகட்டத்தில் நாம்  வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதிலும் ஒரு சிலர்  மரத்தைப் பார்த்தாலே  அவர்களுக்கு என்ன கோபமோ! உடனே வெட்டிவிடத் துடிக்கிறார்கள்!

தனி நிலமாக இருந்தால் நாம் பெரும் பெரும் மரங்களை வளர்க்கலாம். தாமான்களில் அப்படியெல்லாம் வளர்க்க வாய்ப்பில்லை.  அதனால் நடுத்தர, சிறிய மரங்களை வளர்ப்பதால் எதுவும் கெட்டுப்போகாது. அதன் மூலம் நமக்கு நல்ல காற்றும்  கிடைக்கும்.

எப்படியோ மரங்களே இல்லாத இடங்களில் தான் இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதனால் தான் நம்மிடையே ஏகப்பட்ட புலம்பல்கள்.  என்ன செய்வது? உஷ்ணம் தாங்காமல் என்னன்னவோ புலம்பிக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது! தேவையில்லாமல் வெளியே சுற்றாதீர்கள் என்கிறது சுகாதார அமைச்சு. இப்போதே சளி, காய்ச்சல் என்று பரவ ஆரம்பித்துவிட்டது.

அதனால் வெளியே சுற்ற வேண்டாம் என்பதே நமது ஆலோசனையும் கூட!

No comments:

Post a Comment