Sunday 16 April 2023

நினைத்தது நடக்கிறது!

 

நாம் என்ன நினைத்தோமோ அது இப்போது நடந்து கொண்டிருக்கிறது. நாம் அதனை விரும்பவில்லை தான் என்றாலும்  என்ன செய்வது? இது எப்போதும் நடப்பது தான்! 

தமிழர் சமுதாயத்தில் ஒருவர் யாரேனும் கொஞ்சம் முன்னுக்கு வந்துவிட்டால் அடுத்து அவரைக் கவிழ்ப்பது எப்படி  என்கிற வேலை ஆரம்பமாகி விடும்!

பாவம்!  அந்த அக்கா சுமார் பதின்மூன்று ஆண்டுகளாக அவர் ஸ்ரீ கம்பாங்கான் பகுதியில் ஒரு ஸ்டால் வைத்துக்கொண்டு அந்த நாசிலெமாக் வியாபாரத்தைச் செய்து வருகிறார். அவரின் பிழைப்பு நன்றாகவே நடக்கிறது. 

ஏதோ ஒரு நல்ல நோக்கத்தோடு ஒருவர் விடியோ எடுத்துப் போடுகிறார். அதுவரை எந்தப் பிரச்சனையும் இல்லை. அதன் பின்னர் ஒரு சில அநாகரிகக் கூட்டம் இன்னும் பல விடியோக்களை எடுத்து அதனை வைரலாக்கி  அனைத்தையும் நாசமாக்கி விட்டார்கள்!  இப்போது அந்த அக்காளின் வியாபாராத்திற்கே ஆப்பு அடிக்கவும் தயாராகிவிட்டார்கள்.

தம்பிகளா! நீங்கள் நல்ல எண்ணத்தோடு தான் செய்கிறீர்கள்.  ஆனால் பாருங்கள்! எதுவும் புரியாமல் செய்கிறீர்கள். அது எப்போது சண்டையில் போய் முடியும் என்று தான் இப்போது நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது. ஐந்தாறு பேர் சத்தம் போட்டு அந்த இடத்தில் நின்று கொண்டு கத்தினால் போதும்  இனி மக்கள் அந்தப் பக்கம் கூட போக மாட்டார்கள்! எங்கெல்லாம் நியாய-அநியாயம் பேசுகிறார்கள் பார்த்தீர்களா? கேட்க வேண்டிய இடத்தில் மட்டும் வாயை மூடிக் கொண்டிருப்பார்கள்!

இன்று கிடைக்கவில்லையென்றால் நாளை போங்கள். அல்லது இன்னொரு நாள் போங்கள். இல்லாவிட்டால் அந்தப் பகுதியில் வேறொருவர் நாசிலெமாக் விற்பார். அவரிடம் வாங்கிச் சாப்பிடுங்கள்.  இத்தனை ஆண்டுகள் அக்காவிடம் மட்டும்  தான் வாங்கிச் சாப்பிட்டீர்களா? ஏம்பா இப்படிச் செய்கிறீர்கள? ஒருவரின் பிழைப்பில் மண்ணை வாரிப் போடுகிறீர்களே. அதில் உங்களுக்கு என்ன இலாபம்? நீங்கள் ஒரு குடும்பத்தையே அழித்துக் கொண்டிருக்கிறீகள். அவர்களின் வாழ்வாதாரத்தையே தகர்த்துக் கொண்டிருக்கிறீர்கள். புரிந்து கொள்ளுங்கள். 

ஏற்கனவே சுகு-பவித்ரா தம்பதியர் என்ன ஆனார்கள் என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியும். திடீரென நாம் அனைவருமே தூக்கு தூக்கு என்று தூக்கி கடைசியில் தொப்பென்று கீழே போட்டு மிதித்துவிட்டோம். இப்போது அவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை.

அதைத்தான் இப்போது ஒன்றும் புரியாத இந்தக் கூட்டம் செய்து கொண்டிருக்கிறது. காணாததைக் கண்டுவிட்டது போல பேயாட்டம் ஆடிக் கொண்டிருக்கிறது! 

முடிந்தால் ஆதரவு கரம் நீட்டுங்கள். முடியாவிட்டால் அமைதியாக இருங்கள். அக்காள் அவரது  தொழிலில் முன்னேற வேண்டும் என்பதாக இறைவனிடம் வேண்டுங்கள்.

அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் நல்லதே நடக்க: இறைவா! அவர்களை ஆசீர்வதியும்!

No comments:

Post a Comment