Friday 14 April 2023

வாழ்த்துகிறோம் அக்கா!

 

நாசிலெமாக்  செய்வதில் நம்மில் ஒரு சிலர் கொடிகட்டிப் பறக்கின்றனர்.

நான் முன்பு ஒரு காலத்தில் குளுவாங் பகுதியில் வேலையில் இருந்த போது  தமிழர் ஒருவர் ஒரு சாதாரண சிறிய கடையில் நாசிலெமக், பரோட்டா ரொட்டி விற்பனையில் ஈடுபட்டிருந்தார்.  அவர் விற்பனை செய்த வந்த  நாசிலெமாக் - உண்மையைச் சொன்னால் - ஈடு இணை இல்லை என்று தான் சொல்ல வேண்டும். காலை நேரத்தில்  குவிகின்ற சீனர்கள் கூட்டம் சொல்லி மாளாது. இப்போது அந்த உணவகம் தொடர்கிறதா என்பது தெரியவில்லை.

 சமீபத்தில் அதே போன்ற ஒரு கூட்டத்தைப் பார்த்து வியந்து போனேன். டிக் டாக்கில் தான் என்னால் பார்க்க முடிந்தது. தொடர்ந்தாற் போல  சில நாள்களாக அந்த செய்தியினைப் படிக்கவும்   நேர்ந்தது.

அதிலே தான் ஒரு சிக்கல். அந்த அக்காளுடைய வியாபாரம் சிறப்பாக நடப்பதில் நமக்கு மகிழ்ச்சியே! நம் இனத்தவர் ஒருவர் வெற்றிகரமாக ஒரு வியாபாரத்தைச் செய்கிறார் என்றால் அது நல்ல செய்தியாகத்தான்  நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.  நம் மக்களும் அவருக்கு நல்ல ஆதரவைத் தரத்தான் செய்கிறார்கள்.

உண்மையில் நாம் எதிர்பார்ப்பது  இந்த ஆதரவைத்தான். நம் மக்கள்  ஆதரவு தர வேண்டும் என்பதைத்தான்  காலங்காலமாக  நாம் சொல்லி வருகிறோம். இந்தியர்கள் செய்கின்ற வியாபாரங்களுக்கு அதிலும் குறிப்பாக பெண்கள் செய்கின்ற வியாபாரங்களுக்கு நம் மக்களின் ஆதரவு தேவை என்பதை வலியுறுத்துகிறோம்.

ஆனால் அந்த அக்காள் செய்கின்ற அந்த சிறிய வியாபாரத்திற்கு  ஏன் இந்த அளவுக்கு அந்த செய்தியை பெரிதாகப் பரப்பி விளம்பரப்படுத்துகிறார்கள் என்பது தான் புரியவில்லை. அவர் வியாபாரம் நன்றாக நடக்கிறது. அதுவே போதும். பெரிய கூட்டம் வரிசைப்பிடித்து நிற்கிறது. இன்னும் விளம்பரப்படுத்துவதனால் இன்னும் கூட்டம் அதிகம் ஆகும். அந்த அக்காவால் அதனைச் சமாளிக்க முடியுமா? 

அவரையே சிந்திக்க விடுங்கள். அதுவே அவருக்குப் பயன் தரும். நாம் அனைவரும் சேர்ந்து அவருக்குப் புத்தி சொல்ல வேண்டாம். நாம் தேவையற்ற விளம்பரம் கொடுப்பதால் ........நம் மக்களில் ஒரு சிலருக்கு நல்லது நடப்பதைப்  பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது.  நமக்குள்ளே அடித்துக் கொள்வது என்பது எப்போதும் நடப்பது தான். காட்டிக்கொடுப்பது, துரோகம் செய்வது - ஒரு சிலருக்குக் கைவந்த கலை.

நாம் சொல்ல வருவதெல்லாம் அவர் வெற்றி பெற வேண்டும். யாரும் தடையாக இருக்கக் கூடாது. நல்லது செய்கிறோம் என்று அவருக்குத் தீவினை செய்துவிடக் கூடாது 

அக்கா! உங்களை வாழ்த்துகிறோம்! நீங்கள் வெற்றி பெற வேண்டும். யாரை நம்ப வேண்டுமோ  அவர்களை மட்டும்  நம்புங்கள். நீங்கள் வெற்றி பெற இறைவனை இறைஞ்சுகிறோம்!

No comments:

Post a Comment