Tuesday 25 April 2023

வைரல் விடியோ!

 


இப்போது தீடீரென  அனைவரின் கவனமும் விடியோக்கள் பக்கம் திரும்பிவிட்டன!

அக்கா நாசிலெமாக் கடையின் தாக்கம் சிறு வியாபாரங்களில் ஈடுபட்டிருக்கும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது என்பதில் ஐயமில்லை.

ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அக்கா கடையின் வெற்றி என்பது தீடீர் வெற்றி அல்ல.  சுமார் பதின்மூன்று  ஆண்டு  கால உழைப்பு அதன் பின்னால் இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது. எத்தனை கூட்டம் கூடினாலும் அதனைச் சமாளிக்கும் திறமையும் அவருக்கு உண்டு. அது அவருடைய அனுபவம் கற்றுக் கொடுத்த பாடம்.

நாசிலெமாக் என்பது திடீரென முளைத்து வந்த புதிய உணவு அல்ல. அது காலங்கலாய் நம் நாட்டில் உள்ள உணவு. அதன் சுவை பற்றி நாம் அறிந்ததுதான்  அக்கா கடையில் மட்டும் அது என்ன புதிதாய் இருக்கப் போகிறது?  ஆனாலும் ஏதோ ஒன்று, ஒரு திறமை, ஒரு சுவை, மக்களைக் கவரும் தன்மை - இவை எல்லாம் சேர்த்துத்தான் "அக்கா நாசிலெமாக்"  என்பது.

ஏதோ விடியோவைப் போட்டுவிட்டால் வெற்றி வந்து விடாது. உழைப்பு இல்லாமல் எதுவும் நடக்காது. கனிவான பேச்சு இல்லாமல் வியாபாரம் இல்லை. திடீர் பணக்காரன் ஆவதற்கு எந்த ஒரு வழியும் இல்லை. அது ஒரு நீண்டகால பயணம். கடினமான பயணம்.  ஏச்சு பேச்சுகள் உள்ள பயணம். இவைகளை எல்லாம் மீறி தான் வெற்றியைப் பார்க்க முடியும். 

விடியோக்கள்  மூலம், டிக்டோக் மூலம் வெற்றி வந்து விடாது. ஆனால் அதன் மூலம் ஒரு வெளிச்சம் கிடைக்கும். அதனை நீங்கள் முறையாகப் பயன்படுத்திக் கொண்டால்  உங்களது வெற்றி நிச்சயம். ஆனால் எல்லாவற்றுக்கும் அடிப்படை என்பது உழைப்பு மட்டுமே. நூறு விழுக்காடு கவனம் தொழிலில் மட்டுமே இருக்க வேண்டும்.

ஒரு சிலரை நான் பார்த்திருக்கிறேன். தொழில் ஆரம்பித்து கொஞ்சம் வெற்றி தெரிய ஆரம்பிக்கும். உடனே அரசியல் பக்கம் கவனத்தை திருப்புவார்கள்! அவர்கள் வீழ்ச்சிக்கு அவர்களே குழி தோண்டுவார்கள். அதன் பிறகு வீழ்ச்சியைத் தவிர வேறொன்றுமில்லை.

இப்போது உள்ள இளைய சமுதாயத்தினர் தெளிவாக இருக்கிறார்கள். தொழில் செய்தால் தான் பிழைக்க முடியும் என்கிற நிலைமையில் இருக்கிறார்கள். வேலை செய்வதால் பெரிதாக ஒன்றும் சம்பாதிக்க முடியவில்லை என்பது அவர்களுக்குத் தெரிகிறது.

விடியோ, டிக்டோக் எதுவாக இருந்தாலும்  சரி நமது முன்னேற்றத்திற்கு எந்த அளவில் உதவும் என்பது பெரும்பாலான இளைஞர்களுக்குத் தெரிந்து தான் இருக்கிறது. அவைகளைப் பயன்படுத்தி தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும்.

இளைஞர்களே! நவீன உத்திகளைப் பயன்படுத்தி முன்னேறும் வழிகளைப் பாருங்கள்!  வாழ்த்துகள்!

No comments:

Post a Comment