இது மலாக்காவில் கடந்த வெள்ளிகிழமை (21-4-2023) நடந்த ஓர் அசம்பாவிதம்.
ஓரு வியாபாரி என்ன செய்யக் கூடாதோ அதைச் செய்திருக்கிறார் ஓர் "லெமாங்" வியாபாரி. லெமாங் என்பது பெரும்பாலோருக்குத் தெரிந்தது தான். அதுவும் ஹரிராயா காலங்களில் மலாய்க்காரர்கள் சாலை ஓரங்களில் மூங்கில்களில் வைத்து விற்பனை செய்வார்கள்.
எல்லாம் சரிதான். அந்த லெமாங் சரியாக வேகவில்லை என்பது தான் குறைபாடு. அதனால் அதனை வாங்கிய வாடிக்கையாளர் அதை மாற்றிக் கொடுக்குமாறு அந்த வியாபாரியிடம் கேட்டிருக்கிறார். அப்போது தான் பிரச்சனை வந்தது.
அந்த வியாபாரி மாற்றிக் கொடுப்பதற்குப் பதிலாக தன்னிடம் இருந்த மூங்கில் கம்பினால் அந்த வாடிக்கையாளரைத் தாக்கியிருக்கிறார். சுமார் 61 வயதான அந்த வாடிக்கையாளர் ஒரு முன்னாள் இராணுவ வீரர். அந்தத் தாக்குதலினால் அந்த முன்னாள் இராணுவ வீரருக்குக் காதுகளிலும் கைகளிலும் காயத்திற்கு உள்ளானார்.
என்ன நடந்தது என்பதை அந்த வியாபாரி கூறும்போது அந்த வாடிக்கையாளர் தான் கொண்டு வந்த லெமாங்கைத் தூக்கி தன் மீது வீசியதாக அவர் புகார் கூறுகிறார். அத்தோடு இந்த நிகழ்வை விடியோவில் பதிவேற்றம் செய்து அந்தக் கடைக்கு யாரும் வரமுடியாதபடி செய்து விடுவேன் என்று பயமுறுத்தியதாகவும் கூறுகிறார்.
இது போன்ற அசம்பாவிதங்கள் ஒன்றும் புதிதல்ல. அவ்வப்போது நடந்து கொண்டு தான் இருக்கின்றது. ஆனாலும் முக்கியமான ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். ஒரு வாடிக்கையாளர் தவறே செய்தாலும் வியாபாரிகள் பொறுத்துத்தான் போக வேண்டும். அந்த வியாபாரி ஒரு லெமாங்கை மாற்றி கொடுத்திருந்தால் அந்தப் பிரச்சனை அத்தோடு முடிந்து போயிருக்கும். அந்த வாடிக்கையாளர் தொடர்ந்து அந்த வியாபாரிக்குத் தனது ஆதரவைக் கொடுத்திருப்பார். இப்போது ஜென்மைப்பகையாக மாறிவிட்டது!
ஆனால் என்ன செய்வது? விட்டுக் கொடுக்க யாரும் தயாராக இல்லாத போது கடைசியில் காவல்துறை தான் தலையிட வேண்டும்.
வியாபார சமுகத்திற்கு நாம் சொல்ல வேண்டியது: கோபப்படாதீர்கள். அதுவும் உங்களது வாடிக்கையாளர் மீது கோபம் வேண்டாம். "வாடிக்கையாளர் தவறே செய்ய மாட்டார்" என்பதை முதலில் நாம் நம்ப வேண்டும். அந்த மனப்போக்கு தான் வியாபாரிகளைக் காப்பாற்றும்.
சண்டை போடுவது வியாபாரிகளுக்கு அழகல்ல!
No comments:
Post a Comment