மலேசியர்களின் காலை உணவு என்றால் இரண்டு உணவுகள் தான் முக்கியத்துவம் பெறுகின்றன. ஒன்று நாசிலெமாக் இன்னொன்று பரோட்டா என்று சொல்லப்படும் ரொட்டி செனாய்.
நாசிலெமாக் மலாய் மக்களின் பாரம்பரிய உணவு. அப்படித்தான் நான் நினைக்கிறேன். காரணம் நான் பள்ளி படிக்கும் காலத்திலிருந்தே மலாய் மக்கள் தான் அந்த உணவை விற்று வருகின்றனர். நம் பாட்டிமார்களோ, தாய்மார்களோ விற்று வந்ததாக எனக்குத் தெரியவில்லை.
ஆனால் இப்போதோ நிலைமை மாறிவிட்டது. இந்திய உணவகங்கள் கூட நாசிலெமாக் விற்பனைச் செய்கின்றன. ஏன்? நமது வீடுகளில் கூட நாசிலெமாக் செய்ய ஆரம்பித்துவிட்டனர். ஆனாலும் எனக்கென்னவோ மலாய் மக்களின் நாசிலெமாக்குவுக்குத் தான் முதலிடம் கொடுப்பதுண்டு. அவர்களில் கூட இன்றைய தலைமுறையினர் அந்த பாட்டிகளின் சுவையைக் கொண்டு வரமுடியவில்லை! காரணம் இப்போது எல்லாருமே உணவின் சுவைக்கு முதலிடம் கொடுப்பதில்லை. பணத்திற்குத்தான் முதலிடம். அதனால் 'ஏனோ தானோ' என்கிற நிலைமைக்குத் தள்ளப்பட்டுவிட்டது! போகிற போக்கைப் பார்த்தால் அதன் சுவையே மாறிவிடும் போலத் தோன்றுகிறது!
ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். நாசிலெமாக் அல்லது ரொட்டிசனாய் - இவைகளைக் காலை உணவாகப் பயன்படுத்துவது உடல் நலனுக்கு ஏற்றதல்ல என்பதே பொதுவான கருத்து. என்ன செய்வது? ஒரு சில பழக்கங்களை வழக்கத்திற்குக் கொண்டு வந்துவிட்டால் அதனை மாற்றிக் கொள்வது அவ்வளவு எளிதானதல்ல. நாமும் அந்தப் பழக்கத்தை விடப்போவதுமில்லை! வியாதிகளும் வெளியேறப் போவதுமில்லை!
ஒரு சிலரின் உணவு பழக்க வழக்கங்கள் நம்மை அதிர வைக்கின்றன. காலை நேரத்தில் நாசிலெமாக், முட்டை, கோழி இறைச்சி - இப்படி தினசரி சாப்பிட்டு வந்தால் என்ன ஆகும்? என்ன தான் ஆகாது என்று கேட்க வேண்டும் போலிருக்கிறது! ஒரு சிலரோ இருக்கும் போது நன்றாகச் சாப்பிட்டு போகும் போது நன்றாய்ப் போய்ச் சேர வேண்டும் என்கிறார்கள். எங்கே நன்றாய்ப் போய்ச் சேருவது? மருத்துவமனையில் அல்லல்பட்டு, அவதிப்பட்டு, அசிங்கப்பட்டு அல்லவா போய்ச் சேர வேண்டியிருக்கிறது!
நாசிலெமக் அல்லது ரொட்டிசானாய் எதுவாக இருந்தாலும் சரி அளவோடு சாப்பிடுங்கள். அதிலும் என்ன பயன் கிடைக்கும் என்பதைப் பார்த்துச் சாப்பிடுங்கள். எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்பதையும் கவனத்தில் வையுங்கள். காரணம் நம்மைத் தாங்கும் இந்த உடல் இன்னும் கொஞ்ச நாள் தாங்க வேண்டுமானால் நமது சாப்பாட்டைக் கவனிக்க வேண்டும்.
No comments:
Post a Comment