Monday 24 April 2023

விடுமுறையில் போகத் தேவையில்லை!

 

பிரதமர் அன்வார் இப்ராகிம் தொடர்ந்து சொல்லிவரும் செய்தி இது தான். "நீதிமன்றம் ஒருவரைக் குற்றவாளி என்று சொல்லும்வரை அவர் நிரபராதி தான்."

ஆரம்பத்திலிருந்தே அவ்ர் இதைதான் சொல்லி வருகிறார். நீதிமன்றம் குற்றவாளி என்று சொல்லாதவரை அவர்கள் மீது தன்னால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்பது தான்.

இப்போது நாம் மனிதவள அமைச்சர் சிவகுமாரைப் பற்றி தான் பேசுகிறோம். ஊழல் தடுப்பு ஆணையம் இதுவரை அவர் குற்றவாளி என்று சொல்லவில்லை. அவருடைய உதவியாளர்கள் கைது செய்யப்பட்டார்கள். பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.  எல்லாமே சந்தேகத்தின் பேரில் நடந்தவை தான்.

பொதுவாக மக்களிடம் பரவலான  ஒர் அபிப்பிராயம் உண்டு. அரசியல்வாதிகளால் எதனையும் மறைக்க முடியும். உள்ளதை இல்லையென்று சொல்ல முடியும். இல்லாததை உள்ளது என்று சொல்ல முடியும். இந்த ஆற்றல் எல்லா அரசியல்வாதிகளிடமும் உண்டு. அதுவும் நமது நடப்பு அரசாங்கம்  ஒற்றுமை அரசாங்கம் என்னும் பெயரில் ஏதோ பெயர் போட்டுக் கொண்டிருக்கிறது. எந்த அளவுக்கு அது வலிமையான  அரசாங்கமாக இருக்கிறது என்று வெளியே தெரியவில்லை. இதுவரை எந்த அம்னோ பெருந்தலைகள் எதுவும் மாட்டவில்லை. மாட்டினால் தான் அன்வார் வலிமையாக இருக்கிறாரா என்பது தெரிய வரும்.

பிரதமர் அன்வார் நேர்மையானவர் என்பதில் ஐயமில்லை. ஊழல் இல்லா ஓர் அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என்பதில் அவருக்கு அக்கறை உண்டு. அதனை நாம் சந்தேகிக்கவில்லை. ஆனால் அவருடைய அமைச்சரவையில் உள்ளவர்களின்  நேர்மை சந்தேகத்திற்கு  உரியதுதான்!

மனிதவள அமைச்சர் சிவகுமாரைப் பற்றி நாம் அதிகம் அறியவில்லை.  அவர் சார்ந்த மாநில மக்கள் அவரை அறிந்திருக்கலாம். நாம் அறிந்திருக்கவில்லை.  ஆனாலும்  அவருடைய கடந்த கால அரசியலைப் பற்றி  நாம் பொருட்படுத்தவில்லை. அவர் மனிதவள அமைச்சரான பின்னர் அவருடைய பதவிக்கு அவர் பெருமை சேர்க்க வேண்டும். மலேசிய மக்கள் அனைவருக்கும் அவர் அமைச்சர். அமைச்சரவையில் இந்தியர் அவர் ஒருவரே. இந்தியர்  என்னும் பெருமையை அவர் காப்பாற்ற வேண்டும். ஏற்கனவே  ஓர் ஏமாற்றுக் கூட்டம் இந்தியர்களை ஆட்சி செய்து வந்தது. அவர்களைக் குறை கூறி வந்தோம். இனி மேல் அது போன்ற குற்றங்குறைகள் காதுகளில் விழக்கூடாது என்பதே நமது வேண்டுகோள்.

போனது போகட்டும்.  இனி பாதை நேராக இருக்கட்டும். நேர்வழி முடியாது என்றால் பதவியைக் காலி செய்துவிட வேண்டும். நல்லவர்கள் வரட்டும் 

குற்றவாளி என்று நிருபிக்காத வரை எந்த விடுமுறையும் அவருக்குத் தேவையில்லை!

No comments:

Post a Comment