Sunday 30 April 2023

நண்டு கதைகள் வேண்டாம்!

 

நண்டு கதைகளைச் சொல்லிச்சொல்லி தமிழர்களைக்  கொச்சைப் படுத்தாதீர்கள்.. இனி குதிரைக் கதைகளைச் சொல்லி நமது பாதைகளை மாற்றிக் கொள்வோம். முன்னோக்கிச் செல்ல முயற்சி செய்வோம்.

குதிரைகளைப் பார்த்திருக்கீறீர்கள். அவைகளுக்கு வெற்றி ஒன்று தான் இலக்கு.  வேறு இலக்குகளுக்காக அவை பயன்படுத்தப்படுவதில்லை. அந்த அளவுக்கு நாம் வெற்றியாளர்களாகவே உலகம் முழுவதும் வலம் வந்திருக்கிறோம். இப்போதும் நாம் இம்மி அளவும் குறைந்து போய்விடவில்லை! அதே ஆற்றல், அதே வலிமை இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

"சாது மிரண்டால் காடு கொள்ளாது" என்பார்கள். அப்படித்தான் தமிழர்களும்.  மிரண்டுவிட்டால், எனக்கு  நிகர் நான் தான், என்று காட்டிவிடுவார்கள்!

நாம் அறியாமலே பொது இடங்களில் சில வார்த்தைகளைக் கொட்டி விடுகிறோம். அதே வார்த்தைகளைப் பிற இனத்தவரிடம் காட்டுவதில்லை. வம்பு வேண்டாம்! அவ்வளவு தான்! தமிழன் என்றால்: வம்பு வேண்டும்! என்று வம்படிக்கிறோம்!

 கஸ்தூரி நண்டு  என்ன செய்தார். கொட்டுவதையெல்லாம் மக்கள் சிரிக்கும்படியாகக் கொட்டிவிட்டார். இப்போது நான் மன்னிப்புக் கேட்டுவிட்டேன் என்கிறார்.  தேள் கொட்டியது கொட்டியது தானே! சொல்லம்பு பட்ட புண் மாறாது, சகோதரி!

நண்பர் ஒருவர் சொன்னார்: கடையில் எண்ணைய் தீர்ந்துவிட்டது. இருப்பு இல்லை. சரக்கு கிடைக்கவில்லை. இதைத்தான் அவர் வாடிக்கையாளரிடம் சொன்னார். அதற்கு அந்த வாடிக்கையாளர் சொன்னார்: இதற்குத்தான் நான் தமிழன் கடைக்கே வருவதில்லை! 

நமது மக்கள், வியாபாரிகள் தமிழர்கள் என்றாலே கொஞ்சம்  அதிகமாகவே உரிமை எடுத்துக் கொள்கிறார்கள்! அவ்வளவு தான்! பொருள்களை ஒளித்து வைத்து விற்பவர்களைப் பார்த்து பேசப் பயப்படுவார்கள்!

யார் என்ன சொன்னாலும் சில அடிப்படை குணங்கள் நம்மிடமுண்டு. நாம் அடிப்படையில் நல்லவர்கள். நாம் நல்லவர்களாக இருப்பதால் தான் தமிழர்கள் வியாபாரங்களில் வளர்ச்சி அடைந்து வருகிறார்கள்.  இல்லை என்று சொல்லிவிட முடியாது. சமீப காலங்களில் நம்முடைய தொழில் வளர்ந்து வருகிறது. வருங்காலங்களில் இன்னும் சிறப்பாகவே இருக்கும்.

இனியும் நண்டு கதைகளைச் சொல்லி தமிழர்களைச் சிறுமைப்படுத்த வேண்டாம். கஸ்தூரி நண்டுகள் இருக்கத்தான் செய்யும்.  அவைகள் அவ்வப்போது தலைகாட்டத்தான் செய்யும்! இனி குதிரைக் கதைகளைச் சொல்லி "வெற்றியே வாழ்க்கை" என்பதில் முனைப்புக் காட்டுவோம்!

No comments:

Post a Comment