Friday 28 April 2023

நண்டு கதை!

 

நண்டு கதை என்பது குறிப்பாக தமிழர் சம்பந்தமான ஒரு கதையாகவே ஆகிவிட்டது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்குத்  தெரியவில்லை.  உலகில் உள்ள ஜீவராசிகளில் தமிழனுக்கு மட்டும் தானா அப்படி ஒரு நண்டு குணம்? 

 இத்தனை ஆண்டுகளில் சமீபத்தில் தான்  ஒரு நண்டு கதையை நான் தெரிந்து கொண்டேன்.

"அக்கா நாசிலெமாக்" கதையை நாம் அறிந்தது தான். பதின்மூன்று ஆண்டுகள் உழைத்து, நிலைத்து  அதே வியாபாரத்தில் நிற்பவர். அதனை ஒரு நல்ல நோக்கத்தோடு ஒருவர் விடியோவாக எடுத்து  வெளியிட்டார். அதன் பின்னர் அந்த அக்காவுக்கு வியாபாரம் சூடு பிடித்தது. 

எல்லாம் நல்ல விஷயம் தான். ஏதோ கண் திருஷ்டிபட்டது என்பார்களே, அது போல ஒரு சில கூச்சல்களும் குழப்பங்களும்  இடையிடையே ஏற்பட்டன. எல்லாவற்றுக்கும் சிகரம்  வைத்தாற் போல கஸ்தூரி என்கிற பெண்மணி  கொஞ்சம் அதிகமாகவே அந்த அக்காவை அர்ச்சனை செய்து விட்டுப் போனார்!

இந்த கஸ்தூரி அக்காவைத் தான்  நான் பார்த்த முதல் நண்டு என்று சொல்வேன்! நண்டு கதைக்குரிய அத்தனை அம்சங்களும் அவரிடம் இருக்கின்றன.  தொழில் செய்கின்ற இடத்தில் மானாவாரியாகக் கத்துவது, வம்புக்கு இழுப்பது, சண்டைக்கு இழுப்பது, கைகொட்டி சிரிப்பது,  மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் மறந்து சத்தம் போடுவது, தன்னை ஒரு ஹீரோவாகக் காட்டிக் கொள்வது   - இப்படி என்ன செய்யக்கூடாதோ அத்தனையும் மக்கள் நடமாடும் இடத்தில்  நின்று  கொண்டு, தொழில் செய்கின்ற இடத்தில் நின்றுகொண்டு,  அத்தனை  ரகளையும் செய்துவிட்டு  தன் மீது குற்றம் இல்லை என்பது போல பேசுகிறார்!

அதில் மிகவும் சுவாரஸ்யமானது  என்னவெனில் "ஒன்றுமில்லை! அவர் என் சொந்தக்காரர் தான்!"  என்றும் பேசுகிறார்!  இங்கு நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது நமது முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடுபவர்கள் என்றால்  நமது சொந்தக்காரர்கள் தான் என்பதை இந்த ஒரு நிகழ்வை வைத்தே நாம்  முடிவு செய்து கொள்ளலாம்.

எனது வாழ்க்கையில் இப்போது தான் முதன் முதலாக ஒரு நண்டை தெரிந்து கொண்டேன். அது தான் இந்த கஸ்தூரி நண்டு! இதிலிருந்து ஒரு பாடம் நாம் கற்றுக் கொண்டோம். ஆமாம் நண்டு என்பதெல்லாம் எங்கிருந்தோ  வரவில்லை.  எல்லாம் நமது உறவுகளிலிருந்தே  தான் உற்பத்தியாகின்றன!

இதற்கு முன்பு எத்தனையோ நண்டு கதைகள் இருந்திருக்கலாம். ஆனால் இந்த கஸ்தூரி நண்டு தான்  அனைவராலும் நேரடியாக விடியோவில் பார்க்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்களால் விமர்சிக்கப்பட்ட ஒரு கதை!

No comments:

Post a Comment