பொதுவாக அரசியல்வாதிகள் பள்ளிகளுக்கு உதவி செய்வது என்பது எல்லாகாலங்களிலும் நடந்து கொண்டு வரும் ஒரு செயல் தான்.
அப்போதெல்லாம் ஒரே அரசாங்கம் மட்டும் தான். அதனால் அப்போது தமிழ்ப்பள்ளிகளுக்கு உதவி என்றால் அது ம.இ.கா. வினர் மட்டும் தான். வேறு யாரும் பள்ளிகளுக்குள் புகுந்துவிட முடியாது. தலைமை ஆசிரியர்களும் அனுமதி கொடுக்கமாட்டார்கள். அது இயல்பு தான். காரணம் அவர்களில் பலர் ம.இ.கா.வில் ஏதோ ஒரு பதவியில் இருப்பவர்கள். அதனை நாமும் புரிந்து கொள்கிறோம்.
பின்னர் பக்காத்தான் சட்டமன்ற/நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரேனும் தமிழ்ப்பள்ளிகளுக்கு உதவ வேண்டும் என்று நினைத்தாலும் அவர்களால் உதவி செய்ய முடியவில்லை! தலைமைகள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இது ஒரு தொடர்கதை தான்.
ஆனால் நிலைமை இப்போது மாறியிருக்கிறது. மத்திய அரசாங்கம் அல்லது ஒற்றுமை அரசாங்கத்தில், நம்பிக்கை கூட்டணியின் பக்காத்தான் தான் முன்னணி கட்சியாக விளங்குகிறது. பக்காத்தான் கட்சியே ஆளுங்கட்சியாக விளங்குகிறது.
இப்போது பள்ளிக்கூட நிர்வாகம் கொஞ்ச அடக்கி வாசிக்கிறது என்பது நமக்கும் புரிகிறது. இனி பழைய நிலைமை திரும்புமா என்பது இப்போது சொல்வதற்கில்லை. முன்பெல்லாம் "உங்கள் உதவி எங்களுக்குத் தேவை இல்லை!" என்று முகத்தடித்தால் போல பேசியவர்கள் இப்போது அப்படி பேசுவதற்கான வாய்ப்பில்லை!
ஆனால் அவர்களையும் குற்றம் சொல்லுவதில் புண்ணியமில்லை. மாநில கல்வித்துறை சொல்லுவதைத்தான் அவர்கள் கேட்பார்கள். இப்போது மத்திய கல்வித்துறை பக்காத்தான் கையில் இருப்பலதால் இப்போது யாருக்கும் யாரும் தடையில்லை. யார் செய்தால் என்ன? நமக்குத் தேவை பள்ளிக்கூடம் பயன் அடைய வேண்டும். அதை யார் செய்கிறார்களோ அவர்களை நாம் பாராட்டுவோம். அவ்வளவு தான். இங்கு அரசியலைப் புகுத்துவது சரியானது அல்ல என்பது தான் நமது நோக்கம்.
இப்போது ஒற்றுமை அரசாங்கம் எதிர்கட்சிகளுக்கு எந்த தடையும் விதிக்கவில்லை. எந்த விதிமுறையும் மீறக்கூடாது. முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் போன்ற ஒரு சில கட்டுப்பாடுகள் உண்டு. அது எப்போதும் உள்ளது தான். புதிது ஒன்றுமில்லை.
தடையில்லை என்பதற்காக விதிமுறைகளை மீறினால் அதனால் வரும் ஆபத்துகளையும் எதிர்க்கட்சிகள் சந்திக்க தயாராக இருக்க வேண்டும். காரணம் ஒரு சில கட்சிகள் எந்த விதிமுறைகளையும் மீறுவோம் என்கிற நோக்கம் உடையவை.
எப்படியோ நல்லது நடக்க வேண்டும். பள்ளிகள் சிறப்பாக இயங்க வேண்டும். அதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை!
No comments:
Post a Comment