Sunday 2 April 2023

எல்லாமே அளவு தான்!

 

உணவுகளை வீணடிக்க வேண்டாம்! என்பது தான் நமது செய்தி. எல்லாவற்றுக்கும் அளவு உண்டு.  அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பது நம்மிடையே உள்ள பழமொழி.

ஆனால் நமது நாட்டில் ஓர் அதிசயம் நிகழ்வதுண்டு. எப்போதும் இல்லாத உணவு குப்பைகள் மற்ற மாதங்களைவிட இந்த புனித ரமலான் மாதத்தில் தான் அதிகம். மிக மிக அதிகம்.

ரம்லான் சந்தைகளில் உணவுப் பொருள்களை வாங்குபவர்கள்  வீட்டிலுள்ள பெரியவர்கள் தான். பெரியவர்களுக்கு வீட்டிலுள்ள மொத்த உறுப்பினர்கள் எத்தனை பேர் என்பது தெரியும். ஆக தேவையான அளவு வாங்கினால் போதும். இதற்கு அப்படி ஒன்றும் பெரிய பெரிய  கல்வி அறிவு தேவை இல்லை.  நமக்கே தெரியும். யார் சாப்பிடுவார், யார் சாப்பிட மாட்டார், எந்த அளவு சாப்பிடுவார், கூட சாப்பிடுவாரா, குறையாக சாப்பிடுவாரா  போன்ற விபரங்கள் எல்லாம் வீட்டுத்தலைவிக்கு  தெரிந்து தான் இருக்க வேண்டும். அதற்கு ஏற்றாற் போலத்தான் நாம் நமது உணவுகளை வாங்க வேண்டும்.  எதையும் தெரிந்து கொள்ளாமல் ஏதோ கையில் பணம் இருக்கிறதே என்பதற்காக  சும்மா உணவுகளை வாங்கிக் குவிப்பதும், சாப்பிடமுடியாத போது, அவைகளைக் குப்பையில் எறிவதும்  மிக மிக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.

யார் வீட்டுப் பணமாக இருந்தால் என்ன? ஒரு சாரார் உணவுகளை வீணடிப்பதும் அதே சமயத்தில் இன்னொரு சாரார் உணவுக்காக ஏங்குவதும் - இவைகளையெல்லாம் நாம் தெரியாமலா இருக்கிறோம்? தெரியாவிட்டாலும் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா? நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.  யாரையும் அலட்சியப் படுத்தி விடக் கூடாது  அல்லவா?

இன்று நாம் யூடியூப், விடியோ இப்படி எதனைத் திறந்தாலும் அழுகுரல்கள் கெட்கின்றனவே! யாருடைய குரல் அவை? உணவுக்காக அலையும் மக்கள் குரல் தானே?

உணவுகளை அலட்சியப்படுத்த வேண்டாம். அப்படியே உணவுகள் மிஞ்சினால் கூட அவைகளைக் கொண்டு போய் நாய்களுக்குப் போடுங்கள். அவைகளாவது திருப்திகரமாகச் சாப்பிடும்.  நாய்கள் என்னும் போது அதைக் கேவலமாக நினைக்க வேண்டாம். அதுவும் ஓர் உயிர் தான். உணவுகளைக் குப்பையில் போடுவதைவிட அதை நாய்களாவது சாப்பிடட்டுமே! யாரும் தாழ்ந்துவிடப் போவதில்லையே!

உணவுகளை அளவாக வாங்குங்கள். அல்லது அளவாக சமையுங்கள். வீணடிக்காதீர்கள்.  குப்பையில் வீசாதீர்கள். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும்.  உணவு நஞ்சாகாது! மனம் நஞ்சாகும்!

No comments:

Post a Comment