Thursday 6 April 2023

ஓகே பாஸ்!

 

ஒரு சில சமயங்களில் சில அதிசயங்கள் நடப்பது உண்டு. அதில் இதுவும் ஒன்று. அதுவும் நமது நாடான மலேசியாவில்! எப்படியோ நல்லது நடந்தால் பாராட்டுவோம். அவர்களை ஊக்குவிப்போம்! அதுவே நமது கடமை.

கிளந்தான் மாநிலத்தில்  இரு கிளைகளைக் கொண்ட ஒரு நிறுவனத்தை  நடத்திவரும் கைருள் அமிங் அந்த பாராட்டுக்குரியவர். அவருடைய நிறுவனத்தின் பெயர் "சம்பல் நியாட் பெராப்பி" ஆகும்.  அவருக்கு வயது 30.  சம்பல் விற்பனையில் கொடிகட்டிப் பறக்கிறார்! நாம் தினசரி உணவில் சாப்பிடும் சம்பல் தான் அவரது முதலீடு. அவரிடம் சுமார் அறுபது பேர் வேலை செய்கின்றனர். 

தங்களது தொழிலாளர்களுக்குச் சம்பளம் கொடுப்பதில் வடிகட்டிய கஞ்சர்கள் என்று பேசப்படும் முதலாளிகளுக்கிடையே இப்படி ஓர் அபூர்வ முதலாளி இருக்கிறார் என்றால் யாருக்குத்தான் ஆச்சர்யம் வராமல் இருக்க முடியும்?

அந்த முதலாளி அப்படி என்ன தான் செய்தார் என்று தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா.  ஒவ்வொரு தொழிலாளிக்கும் புத்தம் புதிய ஐம்பது ரிங்கிட் நோட்டுகளை அப்படியே  ஒரு கவர் கூட்டில் வைத்து தானே ஒவ்வொரிடமும் கொடுத்திருக்கிறார்! ஒவ்வொரு கவர் கூட்டிலும் சுமார் 3,000 ரிங்கிட் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.  ஒவ்வொரு தொழிலாளியும் தள்ளாடித்தான் போயினர்!   முதலாளி இப்படி கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டுவார்  என்று யாரும்  எதிர்பார்க்கவில்லை!

அத்தோடு அவர் நிறுத்திவிடவில்லை.  பெருநாளைக் கொண்டாட துணிமணிகளையும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். அன்று அவர்களோடு நோன்பும் துறந்திருக்கிறார்! அவர்களுக்கு ஒரு நாள் விடுமுறையும் கொடுப்பதாகக் கூறியிருக்கிறார். 

இது போன்று இவர் செய்வது இது முதல் முறையல்ல. சென்ற ஆண்டும் அவர் செய்திருக்கிறார். அது ஒரு வகையில் உல்லாச பயணமாக அமைந்திருந்தது.

முதலாளிகள் இப்படி எல்லாம் இருப்பார்கள் என்று நாம் எதிர்பார்த்ததில்லை.  ஆனால் இருக்கிறார்கள்.  நல்ல செய்தி. முதலாளிகள் எப்போதும்  தங்களின் நலனுக்கே முக்கியத்துவம் கொடுக்காமல் தங்களிடம் வேலை செய்யும் தொழிலாளர்களின் நலனுக்கும் அக்கறை காட்ட வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.

இப்படியும் ஒரு மாமனிதர்! கடவுள் அவருக்கு நீண்ட ஆயுளைக் கொடுப்பாராக!

No comments:

Post a Comment