பட்டாசுகள் மூலம் ஏற்படுகின்ற விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பது வருத்தத்திற்குரியது என்பதில் சந்தேகமில்லை.
இது எப்போதும் நடந்து கொண்டிருக்கிறது ஒரு விடயம் தான் என்று அலட்சியமாகவும் இருந்துவிட முடியாது. ஒவ்வொரு பெருநாள் காலங்களிலும் இந்த விபத்துகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
நாட்டில் பட்டாசு விற்க தடை உள்ளது என்று சொல்லப்படுகிறதே தவிர நமக்கு அப்படி இருப்பதாகவும் தெரியவில்லை. அதுதான் பெருநாள் காலம் என்றாலே வெடிகள் வெடிக்கின்றனவே! அதுவும் சாதாரண வெடிகள் அல்லவே! பூமியே அதிரும் அளவுக்கு வெடிகள் வெடிக்கப்படுகின்றனவே! யார் கண்டு கொண்டார்கள்? தடை என்று சொல்லிவிட்டு தடைகள் இல்லாமல் பட்டாசுகள் தாராளமாக பயன்படுத்தும் நாடு என்றால் அது நமது நாடு தான்!
பெருநாள் காலங்களில் பட்டாசுகள் வெடிப்பது என்பது ஒன்றும் அதிசயம் அல்ல. அதற்காக பட்டாசு வெடித்து ஒரு குழைந்தைக்கு உடல் முழுவதும் காயம் என்றால் அதனை எப்படி ஏற்றுக்கொள்வது?
சரி, பெருநாள் காலம் என்றால் பட்டாசு வெடிப்பது நமக்கு ஒரு பழக்கமாகி விட்டது. அப்படி ஒரு நிலையை ஏற்படுத்தியவர்கள் நமது வியாபாரிகள். தடை என்று சொன்ன அரசாங்கம் பின்னர் பின்வாங்கிவிட்டது. இப்போது முன்பிருந்த பழைய நிலைமைக்கே திரும்பிவிட்டோம்.
இப்போது என்ன செய்யலாம்? நமக்குத் தெரிந்த ஒரே வழி சிங்கப்பூரைப் போன்று முழுமையாக தடை செய்துவிட வேண்டியது தான். பாவம்! சீனா ஏமாந்து போய்விடும்! அதனால் ஒன்று செய்யலாம். வெடி பட்டாசுகளைத் தடை செய்துவிட்டு சிறு குழந்தைகள், பெரியவர்கள் - யாரையும் அதிகம் பாதிக்காத - மிக எளிமையான பட்டாசுகளை பயன்படுத்தலாம். பூ போன்ற பட்டாசுகள் உள்ளன. குழந்தைகள் கூட அதிக பாதிப்புகள் இல்லாமல் விளையாடலாம்.
தீ காயங்கள் ஏற்பட்டு குழந்தைகள் பெரிய பாதிப்புகளுக்கு ஆளாகாமல் தப்பிக்கலாம்.இந்தத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் என்ன சொல்லுகிறார்களோ அவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு தீ சம்பவங்களைக் குறைக்கலாம்.
அரசாங்கம் நினைத்தால் எதனையும் செய்யக்கூடிய ஆற்றல் அவர்களிடம் உள்ளது. வியாபாரிகள் பணம் சம்பாதிப்பது தான் முக்கியம், கமிஷன் தான் முக்கியம் என்று நினைத்தால் யாரும் ஒன்றையும் கிழித்துவிட முடியாது!
பட்டாசுகள் ஆபத்தானவை! அதன் மூலம் ஏற்படுகின்ற ஆபத்துகளைக் குறைக்க வேண்டும்! இதுவே நமது வேண்டுகோள்!
No comments:
Post a Comment