Monday 17 April 2023

நல்லது நடக்கும் என எதிர்பார்ப்போம்!

 

                                                                  Datuk R.Ramanan 

மித்ரா என்பது இந்தியர் உருமாற்றுத் திட்டம் என்பது நம்மில் பெரும்பாலோர் அறிந்திருக்கிறோம்.

மைக்கா ஹோல்டிங்ஸ் எப்படி  மானங்கெட்ட காரியத்திற்காக மலேசிய இந்தியரிடையே பெயர் வாங்கியதோ அதற்கு ஈடாக செடிக் அல்லது மித்ரா பெயர் வாங்கியிருக்கிறது என்பதும் உண்மை தான். இரண்டுமே ம.இ.கா.வால் நிர்வகிக்கப்பட்டவை. இரண்டுமே ஊழலுக்காக மட்டுமே பேசப்பட்டவை. அது இன்றுவரை பேசப்படுகிறது.ம.இ.கா. வேண்டுமானால் எங்களுக்கும் மித்ராவுக்கும்  சம்பந்தம் இல்லை என்று சொல்லலாம்! நாமும் "கெக்கக்கே! கெக்கக்கே!" என்று சிரித்துவிட்டு போய்விடலாம்!

சமீபத்தில் பிரதமர் அன்வார், சுங்கை  பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரமணன் அவர்களை மித்ரா அமைப்புக்குத் தலைவராக நியமித்திருக்கிறார். அத்தோடு இந்தக் குழுவில் சிகாமட் நாடாளுமன்ற உறுப்பினர் யுனேஸ்வரன், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ்,  ம.இ.கா.வின் செனட்டர் சிவராஜ் சந்திரன் ஆகியோரும் இந்தக் குழுவில் இடம் பெற்றிருக்கின்றனர்.

மேலே அனைவருமே அரசியல்வாதிகளாகவே இருக்கின்றனர்! கொஞ்சம் குமட்டலாகத் தான் இருக்கிறது. அரசியல்வாதிகள் எப்படி என்பதை நாம் பார்த்துவிட்டோம்.  ஆனாலும் நாம் இங்கே பார்ப்பது மித்ராவின் தலைமை இயக்குநர் ரவீந்தர் நாயர் அவர்களைத் தான். அவர் தான் அனைத்துக்கும் பொறுப்பானவர்.   மித்ராவில் எது நடந்தாலும் அனைத்துக்கும் பொறுப்பானவர் ரவீந்திர நாயர் தான். அவர், தன் பெயர் கெட்டுப்போகும் படியாக எதனையும் செய்ய  அனுமதிக்க மாட்டார் என நம்பலாம். அவர் தான் பிரதமருக்குப் பதில் சொல்ல வேண்டியவர் என நினைக்கிறேன்.

மித்ரா என்றாலே நமது அரசியல்வாதிகள் காரித்துப்பும்படியாக அனைத்தையும் செய்துவிட்டார்கள். யாரையும் நம்ப முடியவில்லை. உதவி என்று போகுபவர்களும்  போலியாக இருக்கிறார்கள்!   மித்ராவில் ஒரு சிலரைத் தெரிந்து வைத்துக் கொண்டு தங்களது காரியங்களைச் சாதித்துக் கொள்கின்றனர். அது தான் இது நாள் வரை நடந்து வந்தது. இனி மேலும் அப்படியெல்லாம் நடக்காது என்று எந்த உறுதி மொழியும் இல்லை. இப்போதைக்கு ஊழல் தடுப்பு ஆணையத்துக்குப் பயப்படுவது போல் நடிக்கிறார்களா என்பதும் தெரியவில்லை.

எப்படி இருந்தாலும் நம்பிக்கையோடு இருப்போம். நல்லதே நடக்கும் என நம்புவோம். இனி நல்ல காலம் பிறக்கும் எனவும் நம்புவோம். ஆனாலும் அனைத்தும் நம் கையில் தான்.  நமது ஏற்றமும் தாழ்வும் நமது கையில் மட்டுமே!  யாரை நம்பியும் நாம் வாழவில்லை!

No comments:

Post a Comment