வேலை தேடிப் போகும் இளைஞர்களுக்கு ஒரு சில ஆலோசனைகள். புதிதாக ஒன்றுமில்லை. ஏற்கனவே நீங்கள் அறிந்தது தான்.
மற்ற இன இளைஞர்களுக்கு வேலைகள் கிடைக்கும் போது நமது இளைஞர்களுக்கு மட்டும் கதவுகள் ஏன் அடைக்கப்படுகின்றன? நமக்குத் திறமைகள் இருந்தும் நாம் புறக்கணிக்கப்படுகின்றோம். நம்மிடம் என்ன தான் திறமைகள் இருந்தாலும் எங்கோ நாம் தவறுகள் செய்கின்றோம்! அந்த தவறுகள் என்ன என்பதை நாம் கொஞ்சம் கவனிப்போம்.
பொதுவாக நமது இளைஞர்கள் காதுகளில் கடுக்கன் போடுகின்ற பழக்கம் உடையவர்களாக இருக்கின்றனர். அதிலும் ஒருசிலர் கொண்டையும் வைத்துக் கொள்கின்றனர்! நமக்கும் கூட அதைப் பார்க்கும் போது வேடிக்கையாகத்தான் இருக்கிறது. கடுக்கன் ஒரு வேளை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் கொண்டை என்பது பெண்களுக்கு உரியது. அதனை மற்ற இனத்தவர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்!
ஒரு சிலர் உடல் பூராவும் பச்சை குத்திக் கொள்கின்றனர். அது அவர்களது விருப்பம் தான். நம்மால் ஒன்றும் சொல்லிவிட முடியாது. ஆனால் முடிந்த வரை, நீங்கள் நேர்காணலுக்குச் செல்லும் போது, பச்சை குத்தியிருக்கும் இடங்களை மறைத்துக் கொள்வதற்கு ஏதுவாக பச்சை குத்திக் கொள்ளுங்கள். நீங்கள் படிக்கும் காலங்களில் ஒரு வேளை அதற்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால் நீங்கள் வேலைக்குப் போகும் காலத்தில் அது மற்றவர்களுக்குப் பயத்தை ஏற்படுத்தும்!
நம்முடைய பிரச்சனையே நமது வெளித் தோற்றம் தான். உங்களைப் பார்த்து மற்றவர்களுக்குப் பயம் ஏற்படுகிறது என்றால் நேர்கானல் செய்பவர் நிலை என்ன? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நாம் நல்லவர்களாக இருக்கலாம். ஆனால் நமது தோற்றம் நம்மை வேறு மாதிரியாகக் காட்டுகிறதே!
நேர்காணலுக்குப் போகிறவர்கள் நிச்சயமாக நல்ல தோற்றத்தோடு போக வேண்டும். நல்ல முறையில் உடை உடுத்தி இருக்க வேண்டும். கழுத்துப்பட்டை அணியலாம். அது உங்கள் கல்விக்கு ஏற்ப தேவையா, தேவையில்லையா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். உயர் பதவிக்காக நேர்காணலுக்குப் போகிறவர்கள் நிச்சயமாக கழுத்துப்பட்டை அணியலாம். தாடி வைத்திருந்தால் கூட அது பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும்.
நிச்சயமாக வேலை கிடைத்தே ஆக வேண்டும் என்று நினைத்தால் கடுக்கன், கொண்டை, பச்சை குத்தியிருப்பது போன்றவற்றை தவிர்த்துவிட்டால் உங்களின் எதிர்காலத்திற்கு நல்லது! வேலைக்கு எடுக்கும் நிர்வாகங்கள் வருபவர்கள் நல்ல தோற்றம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று நினைப்பது இயல்பு. அடிபுடி சண்டைக்கா ஆள் எடுக்கிறார்கள்?
என்ன தான் படித்திருந்தாலும் குறைந்தபட்சம் நல்ல, இயல்பான தோற்றம் உடையவர்களாக நிர்வாகங்கள் எதிர்பார்க்கின்றன. நம்முடைய தோற்றத்தைப்பற்றி குறை சொல்ல ஒன்றுமில்லை. எப்போதும் போல இயல்பாகவே இருந்தால் யாரும் குறை சொல்லப் போவதில்லை!
வெற்றி பெற வாழ்த்துகள்!
No comments:
Post a Comment