"அக்கா நாசிலெமாக் கடை" யைப் பற்றி நாம் அதிகமாகவே தெரிந்து கொண்டோம். அது போதும் என்றே நான் நினைக்கிறேன்.
மீண்டும் மீண்டும் அதனைப்பற்றி கிளறிக் கொண்டே இருக்க வேண்டாம். நடந்து போனதைப் பற்றி பேசுவதால் எந்தப் பயனும் இல்லை. நல்லதைக் காட்டினால் அது அவர்களுக்கு நல்ல விளம்பரம். கெடுதலைக் காட்டினால் எதிரணிக்கு அது கொண்டாட்டம்! அவர்கள் அதனை என்றென்றும் வரவேற்பார்கள்!
இப்போது நான் பார்க்கிறேன். அந்தப் பழைய சண்டையையே மீண்டும் மீண்டும் காட்டுகிறார்கள். அந்த வம்பாடிக்கு அது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. காரணம் அவர் எதற்கும் தயார் நிலையில் இருக்கிறார்! நல்லதோ கெட்டதோ தனக்கு நல்ல விளம்பரம் கிடைப்பதாக நினைக்கிறார்! ஆனால் வியாபாரம் செய்யும் அந்த அக்காளுக்கு அதனை மீண்டும் மீண்டும் காட்டுவதால் அது அவரது மனதைப் புண்படுத்தும்.
தயவு செய்து அன்பர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நல்லதைச் செய்கிறேன் என்று அந்த அக்காளுக்கு நீங்கள் கெடுதலைச் செய்கிறீர்கள். நிச்சயமாக அந்த நினைவுகளை அந்த அக்காள் மறக்க நினைக்கிறார்.நீங்கள் விடாப்பிடியாக அவருக்குப் போட்டுக் காட்டி அவரைச் சிறுமைப் படுத்துகிறீர்கள்! நல்லவைகளை திரும்பிப்பார்த்து மகிழ்ச்சி அடையளாம். இது அப்படியா?
நண்பர்களே! அந்த அக்காள் பாட்டுக்கு அவர் தொழிலைச் செய்யட்டும். தொழிலுக்கு அவர் ஒன்றும் புதியவரல்ல. பதின்மூன்று ஆண்டுகளாக தொழில் செய்து கொண்டுவரும் அவருக்குப் பிரச்சனைகளை எப்படி சமாளிப்பது என்பதை நாம் சொல்லிக் கொடுக்கும் நிலையில் இல்லை. அவருக்கு அது தெரியும்.
அவருக்கு ஒரு வழி கிடைத்திருக்கிறது. அதனை வைத்து அவரின் முன்னேற்றத்திற்கு அவர் வழிவகுத்துக் கொள்வார். வழக்கம் போல நாம் அவருக்கு ஆதரவு கொடுப்போம். ஆதரவு தான் தேவை.
சமீபத்தில் பார்த்த அந்த இடையூறுகளை அவர் ஏற்கனவே பார்த்திருப்பார். நமகுள்ளேயே மட்டம்தட்டி மண்ணைப் போடுவதை நாம் பார்த்திருக்கிறோம். இதெல்லாம் நடக்கத்தான் செய்யும். அதே சமயத்தில் நல்லவர்கள் பலர் நம்மைச் சுற்றி இருக்கத்தான் செய்கிறார்கள். எவ்வளவு கெட்டவர்கள் இருந்தாலும் நல்லவர்களுக்காக மழை பெய்யத்தான் செய்யும். நல்லவர்கள் மழையாகப் பெய்யக் காத்திருக்கிறார்கள்.
நண்பர்களே! நான் சொல்ல வருவதெல்லாம் இனி நீங்கள் எந்த விடியோவும் போட வேண்டாம். இதுவரைப் போடப்பட்டவையே போதுமானது. அந்த அக்காளும் தனது வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப தனது தொழிலையும் சீரமைத்துக் கொள்வார். எல்லாமே நல்லதே நடக்கும்.
நடந்தவைகளை மறப்போம்! மன்னிப்போம்! நல்லதே நடக்க வாழ்த்துவோம்!
No comments:
Post a Comment