இன்று முதல் ஆட்டம் அரம்பம்! அரசாங்கம் இதுவரை கொடுத்துவந்த உணவு பொருள்களுக்கான மாநியங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன. உண்மை நிலவரம் இன்னும் ஓரிரு நாட்களில் தெரியவரும்!
உணவு பொருள்களின் விலைகள் கிடுகிடு என ஏறக்கூடிய வாய்ப்புக்கள் நிறையவே உள்ளன. கடைக்காரர்கள் பொருள்களைப் பதுக்குகின்ற வேலைகளும் நடந்து கொண்டிருக்கின்றன! அரசாங்கம் இந்த விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற குரலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது!
கோழி தான் மலேசியர்களின் பிரதான உணவு என்பதால் அதன் விலை ஒரு கிலோ ரி.ம. 9.40 என அறிவிக்கப்பட்டிருக்கிறது. முட்டைகளின் விலை 41 காசுலிருந்து 45 காசுவரை அதன் தரத்திற்கேற்ப உயர்த்தப் பட்டிருக்கிறது. (ஏற்கனவே இதை விடக் கூடுதலான விலைக்குத்தான் நாங்கள் வாங்கிக் கொண்டிருக்கிறோம் என்பது வேறு கதை!) கோழி, முட்டை சார்ந்து தயாரிக்கப்படும் உணவு பொருட்களின் விலைகள் அனைத்தும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. போத்தல்களில் விறபனை செய்யும் சமையல் எண்ணெய் ஏற்றங் காணும். அதற்கான உதவித் தொகையை அரசாங்கம் நிறுத்திக் கொண்டது. எந்த அளவு உயரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
எது எப்படியோ ஒரு விஷயம் நிச்சயம். அரசாங்கத் தலையீடு இல்லையென்றால் விலைகள் விஷம் போல ஏறிவிடும் என்பது மட்டும் நிச்சயம். இது நாள் வரையில் எப்படியோ பெரிய பாதிப்புகள் இல்லாமல் கடந்து வந்துவிட்டோம். இந்த முறை ரஷ்யா/உக்ரைன் சண்டையைக் காரணமாக வைத்து பிரச்சனைகள் முளைத்திருக்கின்றன.
என்ன என்ன பொருட்கள் இறக்குமதி ஏற்றுமதி ஆகின்றன என்பதை வியாபாரிகள் சொல்லும் போது தான் நமக்குத் தெரிகிறது. எதை எடுத்தாலும் இறக்குமதி, இறக்குமதி என்கிறோம்! அப்படியென்றால் நாம் என்ன தான் இங்கு தயார் செய்கிறோம் என்பது புரியவில்லை. குறிப்பாக உணவு பொருட்கள் உற்பத்தி என்பது முக்கியம்.
பிரதமரோ இப்போது தான் விவசாயம் செய்ய ஊக்குவிக்கிறோம் என்கிறார்! இப்போது தான் நிலங்கள் ஒதுக்கப்படுகின்றன. இனிமேல் தான் மற்ற வேலைகள் எல்லாம் ஆரம்பம். இனி மேல் தான் பயிர் செய்ய வேண்டும்.
எல்லாமே சரி தான். ஆனால் விலைகள் மட்டும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்பதும் முக்கியம்.
இந்த நிமிடம், இந்த நெருக்கடியான காலகட்டத்தில், எப்படி சமாளிக்கப் போகிறோம் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதுவும் கடந்து போகும் என நம்புவோம்!