Thursday 17 August 2023

மதமாற்றம் செய்வது பிரதமரின் வேலையா?

 

பிரதமர் அன்வார் இப்ராகிம் ஓர் இந்து இளைஞனை மதமாற்றம் செய்து வைத்தது அவரது வேலையா  என்பது நமக்குத் தெரியவில்லை!

இதுவரை ஜாக்கிம் அந்த வேலையைச் செய்து வந்தது. இப்போது அந்த வேலையை பிரதமர் செய்திருக்கிறார்! இனிமேலும் அவர் தான் செய்வாரா என்கிற கேள்வியும் எழுகிறது. அதற்குக் காரணம்  ஒரு வேளை  இது போன்ற வேலைகளுக்கு ஜாக்கிம் தேவை இல்லை என்று கூட அவர் நினைத்திருக்கலாம்.

இப்போது நமது பிரச்சனை என்ன? ஓர் இந்து இளைஞனை மதமாற்றம் செய்தார் என்பது தான் பிரதமரின் மேல் உள்ள குற்றச்சாட்டு. மதமாற்றம் செய்யும் போது அந்த இளைஞனின் பெற்றோர்களையும் கூட வைத்திருக்கலாம். அது தான் அவர்களுக்குப் பிரதமர் கொடுக்கும் மரியாதை. அந்தப் பெற்றோர்கள் மதமாற்றத்தை ஏற்கவில்லயென்றால் இந்த மதமாற்றமே நடந்திருக்கவே கூடாது.

மதமாற்றம் என்பது இஸ்லாம் அல்லாதவருக்கு மிகவும் புண்படுத்தும் விஷயம். அந்த இளைஞனுக்கு பத்தொன்பது வயது என்னும் போது அவன் இன்னும் உலகம் அறியாதவன் என்பது தான் பொருள். பிரதமர் யாரோ ஒரு சிறுவனுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து மதமாற்றம் செய்கிறார் என்றால்  அவனது உறவுகளுக்கும் அவர் முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும்.

ஜாக்கிம் மதமாற்றம் செய்தால் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது ஒரே வழி தான். யாருடைய அனுமதியும் அவர்கள் எதிர்பார்ப்பதில்லை. அப்படித்தான் அவர்கள் பணிக்கப்பட்டிருக்கிறார்கள்! ஆனால் பிரதமர் நிலை வேறு. நாட்டின் முதலாவது பதவியில் இருப்பவர். அவர் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருந்திருக்க வேண்டும். பெற்றோர்களை அணுகி இருக்க வேண்டும். அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

காரணம் அந்த இளைஞனுக்கு VIP க்குள்ள மரியாதைக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஓர் உயர்ந்தநிலை மரியாதை அவனுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.  அவ்னுடைய பெற்றோர்களுக்கும் அந்த மரியாதை வழங்கப்பட்டிருக்கலாம் அன்றோ? அப்படி அந்தப் பெற்றோர்கள் மதமாற்றத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் பிரதமர் அந்த மதமாற்றத்தை செய்திருக்கக் கூடாது. இது போன்ற விளம்பரங்களிலும் ஈடுபட்டிருக்கக் கூடாது.

பிரதமரின் நோக்கம் தான் என்ன?   இந்திய சமுதாயம்,  ஏழை சமுதாயம் என்று அவர் எப்போதும் சொல்லி வருகிறார். அதாவது  பழங்குடி மக்களோடு ஒப்பிட்டு எப்போதும் அவர் பேசி வருகிறார். நாம் முன்னேற வேண்டும்  என்று இவர் பதவியேற்றதிலிருந்து எந்த முனைப்பையும் காட்டவில்லை. எந்த முயற்சியும் செய்யவில்லை என்கிற  குற்றச்சாட்டும் உண்டு.

இப்படி மதமாற்றம் செய்வதன் மூலம் அவரது நோக்கம் நமக்குப் புரிகிறது.  ஏழையாக இருப்பவர்களை மதமாற்றம் செய்வது  எளிது என்று அவர் நினைப்பதாகத் தோன்றுகிறது.  எப்போதும் போல  இந்தியர்கள் ஏழைகளாகவே இருக்கட்டும் அது தான்  நாட்டுக்கு நல்லது என்று அவர் எண்ணுவதாகவே நாம் நினைக்கலாம். ஒரு சீன இளைஞனை அவர் இப்படி எல்லார் முன்னிலையிலும, தொலைகாட்சி புடை சூழ, இப்படி மதமாற்றம் செய்ய முடியுமா?  சீன சமுதாயத்தைப் பகைத்துக்கொள்ள முடியுமா? சீன சமுதாயம் அவரை ஓரங்கட்டி விடுவார்கள் என்பது அவருக்குத் தெரியும்.

இந்திய மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் இடங்களை அதிகரித்தால் மலாய் சமுதாயம் பிரதமரை ஓரங்கட்டி விடுவார்கள்!  சீன இளைஞனை இப்படி மதமாற்றம் செய்தால் சீன சமுதாயம் ஓரங்கட்டி விடும் என்பதும் அவருக்குத் தெரியும்! ஆக இந்திய சமுதாயத்தின் மீது எப்படி வேண்டுமானாலும் பந்தாடலாம்! 

ஆக, இந்திய சமுதாயம்  அவரது தொழிலையே மாற்றிவிட்டது எனலாம்!

No comments:

Post a Comment