நன்றி: வணக்கம் மலேசியா
நெகிரி ஆட்சிக்குழுவில் மீண்டும் நீலாய் சட்டமன்ற உறுப்பினர் அருள் குமார், ரெப்பா சட்டமன்ற உறுப்பினர் வீரப்பன் இருவரும் ஆட்சிக்குழுவில் இணைந்திருப்பதை நாமும் வரவேற்கிறோம்.
இடையிலேயும், சில மாதங்களுக்கு முன்னர், ஜ.செ.க. வின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் அவருடைய அமைச்சின் கீழ் அருள்குமார் மாற்றப்பட்டு அந்த இடத்தில் வேறோரு சீன சட்டமன்ற உறுப்பினர் நியமிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாயின. ஆனால் ஒன்றும் புரியவில்லை. அருள் குமார் மீண்டும் பழையபடி ஆட்சிக்குழுவில் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஜ.செ.கா.வில் என்ன நடக்கிறது என்று புரியவில்லை. ஏதோ களையெடுப்பு நடக்கிறது என்று மட்டும் புரிகிறது.
ஆனாலும் இவர்கள் இருவருமே நீண்ட நாள்களாக ஆட்சிக்குழுவில் இருக்கின்றனர். அவர்கள் செயல்பாடுகளைப்பற்றி எதுவும் தெரியவில்லை. சரி இத்தனை ஆண்டுகள் எப்படியோ நமக்குத் தெரியாது.
ஆனால் இந்த நிலை இப்படியே போய்க் கொண்டிருக்க முடியாது. அவர்கள் களத்தில் இறங்க வேண்டும். இப்போது நாட்டில் நடப்பது ஒற்றுமை கூட்டணி. இதில் பி.கே.ஆர். முக்கிய பங்கு வகிக்கிறது.
இதற்கு முன்னர் தேசிய முன்னணி பதவியில் இருந்த போது நமது தமிழ்ப்பள்ளிகளில் இருந்து ஏகப்பட்ட புகார்கள் வந்து கொண்டிருந்தன. குறிப்பாக பள்ளிகளின் உரிமம் சம்பந்தமான பிரச்சனைகள். பள்ளிகள் தனியார் நிலங்களில் உள்ளன என்று புகார்கள் எழுப்பட்டன. ஆனால் இன்று எதனையும், எந்தப் புகாரையும் ஒன்றையும் காணோம். அனைத்தும் சரிசெய்யப்பட்டு விட்டதா, எதுவும் பொது மக்களுக்குத் தெரியவில்லை. இவர்களே தொடர்ந்து ஆட்சிக்குழுவில் இருக்கும் போது நிச்சயமாக நல்லது நடந்திருக்க வேண்டும்.
கோரோனா தொற்றின் தாக்கத்தின் போது எல்லா உணவகங்களிலும் அந்த நோய் சம்பந்தமான விளம்பரங்கள் வெளியாயின. அந்த விளம்பரங்கள் மலாய், ஆங்கிலம், சீனம் ஆகிய மொழிகளில் எல்லாருக்கும் தெரியும்படியாக ஒவ்வொரு உணவகத்திலும் ஒட்டப்பட்டிருந்தன. தமிழ் மொழி மட்டும் அங்கே இல்லை. அதனைச் சுட்டிக்காட்டி ஓய்பி வீரப்பனுக்கு எழுதியிருந்தேன். காரணம் அவர் தான் சுகாதாரத்திற்குப் பொறுப்பேற்றிருந்தவர். ஒன்றும் நடக்கவில்லை.
நான் இங்கு சொல்ல வருவதெல்லாம் நாங்கள் சொல்லித்தான் ஒவ்வொன்றையும் செய்ய வேண்டும் என்பதில்லை. தமிழ் மொழி எங்கு விடப்படுகிறதோ அதைத்தட்டி கேட்க நீங்கள் அங்கு இருக்கிறீர்கள். அதனைக் கேட்க வேண்டும். உங்களால அது முடியவில்லை என்றால் ஜ.செ.க. தான் உங்களுக்குத் தடையாக இருக்கிறது என்பது பொருள்.
இப்போதைய ஜ.செ.க. தலைமைத்துவம் இந்தியர்களுக்கு எதிராக இருப்பதாகவே எண்ண வேண்டியுள்ளது. உங்கள் நடவடிக்கைகள் மூலம் அதனை உறுதிபடுத்தாதீர்கள்.
ஓய்பி வீரப்பன், ஓய்பி அருள் குமார் அவர்களின் சேவை தொடர வேண்டும் என்பதே நம ஆசை. வாழ்த்துகள்!
No comments:
Post a Comment