Friday 25 August 2023

போதும்! குனிந்தது போதும்!

 

மேலே படத்தில் பண நோட்டுகளைத் தானே பார்க்கிறீர்கள்?

ஆம்,  அது தான் சத்தமாகப் பேசும் என்பதை மறந்து விடாதீர்கள். பணம் பாதாளம் மட்டும் பாயும் என்பது பொய்யல்ல.  நாம் தான் அதை ஏற்றுக் கொள்வதில்லை.  அது தான் பிரச்சனை.

நம் நாட்டிலேயே எடுத்துக் கொள்ளுங்கள். யாருக்கு பிரச்சனை அதிகம் எழுகிறது?  சீனர்களும் நம்மைப் போல இங்கு வந்தவர்கள் தானே? ஏன் அவர்களை மட்டும் யாரும் சீண்டுவதில்லை. அடி என்பது நமக்குத் தானே  விழுகிறது?  யார் வேண்டுமானாலும் நம்மை சீண்டுகிறானே? அப்படியென்றால்  என்ன பொருள்?

ஒரு காலத்தில் நாட்டின் மருத்துவர்கள் என்றால்  அவர்கள் இந்தியர்கள்   தான்.  இப்போது அது பற்றி பெருமை கொள்ள முடியுமா? கல்வி என்றால் அவர்கள் இந்தியர்கள் தானே? இப்போது அந்தப் பெருமை எல்லாம் எங்கே போயிற்று?

சரி அனைத்தும் நம்மிடமிருந்து பறிக்கப்பட்டு விட்டன.  இப்போது என்னவானது?  மருத்துவம் படிக்க தகுதி இருந்தும் நமக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன! ஓர் ஆசிரியர் ஆக வேண்டும் என்றால் கூட அதுவும் கூட வாய்ய்பில்லை. அதாவது பிரதமர் அன்வார் கூறியது போல நாம் இப்போது பழங்குடி மக்களின் வரிசைக்கு வந்து விட்டோம்.

ஆனால் என்னதான் நம்மைக் கீழே தள்ளி மிதித்தாலும் இந்த இனம் தன்னை தானே முட்டி மோதி தன்னை உயர்த்திக் கொள்ளும் சகதி வாய்ந்த இனம்.  இப்போது நடப்பதெல்லாம் ஏதோ வீழ்ச்சி போன்று தோற்றமளிக்கலாம்.  இது தற்காலிகம் தான்.  புனித தீ பறவை என்பார்களே பீனிக்ஸ் பறவை அது தான் தமிழினம். எத்தனை தடவை வீழ்ந்தாலும் அது மீண்டும் மீண்டும் எழுந்து நிற்கும்.  வீழ்ச்சி என்பதே இல்லை.

அதனால் தான் ஒயாது நம் மேல் தாக்குதலை ஏற்படுத்தினாலும் நாம் மீண்டும் மீண்டும் எழுந்து நிற்கிறோம். மருத்துவமே நமக்கு எட்டாத கனியாக இருந்தாலும்  வெளி நாடுகளில் மருத்துவம் படிப்பதை யாராலும் நிறுத்த முடிவதில்லை.  ஓர் ஏழை கூட தனது சொத்துகளை விற்றாவது தனது பிள்ளைகளைப் படிக்க வைக்கிறான்.அதற்கு மேலாக  படிப்பதற்கான கடன் வசதிகளும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

இந்த சமுதாயம் அப்படித்தான். என்றும் கீழே விழ வாய்ப்பில்லை. கல்வியை வைத்துத்தான் நாம் முன்னேற வேண்டும். அதனை இந்த சமுதாயம் புரிந்து வைத்திருக்கிறது. அதனால் தான் இன்று நமது பிள்ளைகள் பல துறைகளில் வாய்ப்புக்களைத் தேடி கல்வி கற்கிறார்கள்.

வாய்ப்பே இல்லை என்று புலம்பிக் கொண்டிருப்பதை விட கிடைக்கின்ற வாய்ப்பினைப் பயன்படுத்தி  நம்மை நாம் உயர்த்திக் கொள்ள வேண்டும். கிடைக்கவில்லை என்பதற்காக  புலம்ப வேண்டாம். அப்படியெல்லாம் எல்லாக் கதவுகளும்  மூடிவிடவில்லை. இன்னும் பல வாய்ப்புகள் இருக்கின்றன.

ஒன்றே ஒன்று தான்:  உங்கள் சொந்தக் காலில் நில்லுங்கள்!

No comments:

Post a Comment