Saturday 19 August 2023

இதைத்தான் நாம் எதிர்பார்க்கிறோம்!

 

பிரதமர் அன்வார் அவர்களின் மதமாற்ற விவகாரத்தில் "ஓய்பி இது சரியல்ல!"  என்று குரல் கொடுத்தவர் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்களை மனதாரப் பாராட்டுகிறேன். தொடர்ந்து அவர் குரல் கொடுத்து வருகிறார். இனியும் குரல் கொடுப்பார்.

அநீதிகள் நடக்கும் போது சும்மா பார்த்துக் கொண்டிருக்க முடியாது ஆனால் ஒன்று. நாம் தான் அநீதி என்கிறோமே தவிர பிரதமர் அதனை அநீதியாக ஏர்றுக்கொள்ளவில்லை. இதுவரை அவர் அப்படி எதனையும் ஏற்றுக்கொண்டதாகச் செய்திகள் இல்லை.

இங்கு நாம் சொல்ல வருவதெல்லாம் இது ஒரு தவறான முன்னுதாரணம் என்பது தான். இவரே அப்படி ஒரு தவற்றைச் செய்தால் ஜாக்கிம் தவறு செய்கிறது என்று எப்படி சொல்லுவது?

பிரதமரே மதமாற்றத்தின் போது அந்த இளைஞனின் குடும்பத்தைப் புறந்தள்ளிவிட்டார். அவர்களின் அனுமதி தேவை இல்லை என்கிற ரீதியில் தான் செயல்பட்டிருக்கிறார். ஜாக்கிம் அதனைத்தான் செய்கிறது. அவர்கள் யாரைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. அது தேவையும் இல்லை. யார் அகப்பட்டாலும் "பிடி அவனை! மாற்று மதத்தை!"  என்று தான் அவர்கள் செயல்படுகிறார்கள்!  அது கூடாது என்பது தான் இஸ்லாம் அல்லாதவர்கள் ஜாக்கிம் மீது வைக்கும் குற்றச்சாட்டு!

ஆனால் பிரதமர் என்ன செய்தார்? அவர் அப்படி செய்ததின் நோக்கம் என்னவாக இருக்கும் என்று சிந்திக்கும் போது நாம் முகம் சுழிக்க வேண்டியுள்ளது. இவர் இப்போது என்ன செய்தாரோ அதையே தான் நாளை ஜாக்கிம் செய்யும்! காரணம் பிரதமரே ஓரு  முன்னுதாரத்தைக் காட்டியிருக்கிறார்.

வழக்கு விசாரணை என்று வரும்போது பிரதமரின் இந்த செய்கையே நாளை முன்னுதாரணமாக கொள்ளப்படலாம்.

பிரதமர் இது போன்ற செய்கைகள் மூலம் இந்தியர்களுக்கு என்ன சொல்ல வருகிறார்? "இந்தியர்கள் சிறுபானமையினர்! இவர்களால் என்ன செய்ய முடியும்"  என்று அவர் நினைக்கலாம். "ஏழை இந்தியர்கள்! பெரிதா என்ன செய்ய முடியும்!" என்று நினைக்கலாம். "பழங்குடி மக்களை காலங்காலமாக ஏமாற்றி வந்திருக்கிறோம்! அவர்களால் என்ன செய்ய முடிந்தது? இவர்களும் அந்த இலட்சணத்தில் தானே இருக்கிறார்கள்! என்ன வேண்டுமானாலும் செய்யலாம்!" என்பதும் கூட  அவருக்கு நினைவில் வந்திருக்கும்!

இப்படியெல்லாம் பிரதமரின் நினைவுக்கு  வந்திரூக்கூடிய வாய்ப்பு உண்டு. ஏனென்றால் அவர் இதனை முறையாகச் செய்யவில்லை. ஜாக்கிம் செய்வது போல ஏதோ திருட்டுத்தனமாக நடந்ததாகத் தான் நாம் நினைக்க வேண்டியுள்ளது.

இன்றைய நிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக டத்தோஸ்ரீ சரவணன் நியாயமான முறையில் செயல்பட்டிருக்கிறார். தொடர்ந்து செயல்படுவார் எனவும் நம்பலாம். இப்போது அவர் தானே குரல் கொடுக்கிறார். பொது மக்களின் சார்பில் பேராசிரியர் இராமசாமியும் குரல் கொடுக்கிறார். இன்னும் பலரும் கொடுக்கின்றனர்.

டத்தோஸ்ரீ மீண்டும் உங்களுக்கு நன்றி!

No comments:

Post a Comment