Sunday 13 August 2023

வாழ்த்துகள்!

 

                                Negeri Sembilan, Menteri Besar  Datuk Sri Aminuddin Harun

நெகிரி செம்பிலன், மாநில மந்திரி பெசாராக, இரண்டாம் தவணையாக, டத்தோஸ்ரீ அமினுடின் ஹருன், வயது 56,  கோலப்பிலா, இஸ்தானா பெசார், ஸ்ரீமெனாந்தியில், நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் துவாங்கு முனாவிர் முன்னிலையில்   பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.  அந்நிகழ்வில் ஒற்றுமை அரசாங்கத்தின் தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்

பொதுவாக பல மாநிலங்களிலும் பலவித பிரச்சனைகள் இருந்தாலும் நெகிரி செம்பிலானில் அதிகப் பிரச்சனைகள் இல்லாத மாநிலமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு வேளை பிரச்சனைகள் இருந்தாலும் அதனை வெளிக்கொணர  யாரும் இல்லையோ என்று யோசிக்க வேண்டிய நிலையிலும் நாம் இருக்கிறோம்.

சென்றமுறை எந்த ஒரு எதிர்க்கட்சியும் இல்லாத நிலையில் எந்த ஒரு பிரச்சனையும் பேசப்படவில்லை. அது தான் உண்மை. ஆனால் இந்த முறை அப்படியல்ல. பெரிகாத்தானிலிருந்து ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமர்ந்து கொண்டிருக்கின்றனர். அதனால் பிரச்சனைகள் வெளி வரும் என நம்பலாம்.

நம்மிடம் ஒரு சொலவடை உண்டு. "தட்டிக் கேட்க ஆளில்லை என்றால் தம்பி சண்டப்பிரசண்டம் செய்வான்" என்பார்கள். அதனால் தட்டிக்கேட்க ஆள் வேண்டும். அதுவும் இது அரசியல்.  கொள்ளையடிப்பதற்கு என்றே ஒரு கூட்டம் சுற்றிக்கொண்டு தான் இருக்கும்.  அவர்களை நாம் என்ன செய்ய முடியும்?  தடித்த தோல்கள்! எதுவும் உறைக்காது!

எதிர்க்கட்சி இல்லை என்பதால் நாமும்  எந்த ஒரு எதிர்ப்புக் குரலையும் கேட்கவில்லை. ஆனால் நமக்கு ஒரு நம்பிக்கையுண்டு. பிரதமர் அன்வார் மேல் நமக்கும் நம்பிக்கையுண்டு. இலஞ்சம், ஊழலை அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார்.  ஏற்கனவே அது பற்றியான தனது வலுவான கருத்தை அரசியல்வாதிகளுக்குக் கடுமையான முறையில் எச்சரித்துவிட்டார். அதனால் அவ்வளவு எளிதில் இலஞ்சம் ஊழல் என்பது தொடர  அரசியல்வாதிகள் விரும்பமாட்டார்கள்.

எப்படியோ நெகிரி செம்பிலான் அரசாங்கம் தனது பணிகளை செவ்வனே செய்ய நாம் வாழ்த்துகிறோம். நமது இந்திய உறுப்பினர்களின் சேவை பற்றி நமக்கு  அதிகமாக ஒன்றும் தெரியவில்லை. மக்கள் தான் சொல்ல வேண்டும்.

மாநிலத்திற்கு நல்லது நடக்க வேண்டும். இந்தியர்களின் பிரச்சனைகளுக்கு நல்லதொரு தீர்வு காண வேண்டும். அதுவே நமது  வேண்டுகோள்.

மீண்டும் வாழ்த்துகள்!

No comments:

Post a Comment