Sunday 20 August 2023

இது தான் நமது ஆலோசனை!

 

நம் தமிழர்களுக்கு நாம் சொல்லுகின்ற ஒரு சிறிய ஆலோசனை.   இந்தியர்களுக்குச் சொல்ல வேண்டியது எதுவுமில்லை. அவர்கள் பிழைக்கத் தெரிந்தவர்கள். நமக்குத் தான்,  தமிழர் சமூகத்திற்குத்தான்,  ஆலோசனைகள் தேவைப்படுகின்றன.

பினாங்கு மாநிலத்தின்  IIவது துணை முதல்வராக ஜக்டீப் சிங் டியோ பதவியேற்றிருக்கிறார். கடந்த 16 வருடங்களாக பேராசிரியர் இராமசாமி அவர்களையே பார்த்துப் பழகிப்போன நமக்கு  இந்த மாற்றம் நம் மக்களுக்கு  ஏற்பது கடினமாகத்தான் இருக்கும்.  ஆனால் இது அரசியல்.  வருவதும் போவதும்  சகஜமான விஷயம் தான்  பேராசிரியருக்கு போக வேண்டிய நேரம் வந்துவிட்டது. புதியவரான ஜக்டீப் சிங் வரவேண்டிய நேரமும் வந்துவிட்டது. அவ்வளவு தான்.

புதியவரான ஜக்டீப் தமிழர் அல்லரே தவிர மற்றபடி தமிழர் பிரச்சனையை அறியாதவர் அல்லர்.  அவர் தந்தையார், காலஞ்சென்ற கர்பால் சிங், அவர்கள் காலத்திலிருந்தே பொதுசேவையில் உள்ளவர்கள் அந்தக்  குடும்பத்தினர். நாடறிந்தவர்கள்.  நல்லவர்கள் வல்லவர்களென்று பெயர் எடுத்தவர்கள். 

நம் மக்கள், நம் இயக்கங்கள், நம் அமைப்புகள் பொது விஷயங்களோ,தனிப்பட்ட பிரச்சனைகளோ வழக்கம் போல அவரை அணுகலாம்.  நமது பேராசிரியரை எப்படி சென்று அவரைப் பார்த்தீர்களோ அதே போல இவரையும் சென்று பார்க்க வேண்டும். உங்கள் பிரச்சனைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

துணை முதல்வர் பதவி என்பது பொதுவான ஒரு பதவி.  இந்த இனத்தவருக்குத்தான்  என்று சொல்லுவதற்கில்லை. அரசியலில் அப்படி எல்லாம் எந்த ஒரு பதவியும் இல்லை. அரசியல் என்றாலே  எந்த இனத்தவரும் வரலாம் போகலாம். பேராசிரியர் இருக்கும் போது கூட  அவர் அனைவருக்கும் பொதுவானவராகத்தான்  இதுந்தார். அவர் வெற்றி பெற்ற தொகுதியில் உள்ளவர்கள் வரத்தான் செய்வார்கள். அவர்களின் குறைகளைக் கேட்கத்தான் வேண்டும்.

வேறொரு இனத்தவர் என்றாலே பின்வாங்கும் போக்கு நம்மிடம் உண்டு.  அது போன்ற குறைகள் இனி  நம்மிடம் இருக்கக் கூடாது. வருங்காலங்களில் வேற்று இனத்தவர்கள்  நாம் வாழும் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றால்  அவர்களை நாம் புறக்கணிக்க முடியாது. நமக்குப் பிரச்சனைகள் வரும் போது அவர்களைத்தான் நாம் நாட வேண்டும்.

பினாங்கு இரண்டாம் முதல்வர் அனைவருக்கும் பொதுவானவர். அவர் சீக்கியர் என்பதற்காக  நாம் பயந்து நடுங்கக் கூடாது. அவர் நமக்கு உதவி செய்யக்  காத்திருக்கிறார். அது அவரது கடமை. நாம் அவரை உதாசீனப்படுத்தினால் நட்டம் அவருக்கல்ல நமக்குத்தான்.  காரணம் அதிகாரம் வலிமையானது. அதனால் அவரை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அவர் இந்தியர்களின் சார்பில் இருந்தாலும் அவர் அனைவருக்கும் பொதுவானவர்.

நாம் நல்லவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். நாம் வல்லவர்களாகவும் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.  வாழ்க மலேசியா!

No comments:

Post a Comment