சமீப காலங்களில் இந்த "ஊர்" என்கிற சொல் மிகவும் அதிகமாகவே பேசப்பட்டு வருகிறது. அதாவது ஊர், ஊர்க்காரர், ஊர்க்காரன் என்று கூறி தமிழ் நாட்டிலிருந்து இங்கு வந்து வேலை செய்பவர்களை அவமானப்படுத்துவதாகவும், இழிவுபடுத்துவதாகவும் கூறப்படுகின்றது.
தமிழ் நாட்டிலிருந்து வந்த இன்றைய தலைமுறையினருக்கு ஊர் என்றால் அதன் அர்த்தம் புரியவில்லை. அந்தக் காலத்தில் மலேயாவிலிருந்து எஸ்.எஸ்.ரஜூலா கப்பல் மூலம் தமிழ் நாட்டுக்குத் திரும்புபவர்கள் தமிழ் நாட்டுக்குப் போகிறேன் என்று சொல்லுவதில்லை. ஊருக்குப் போகிறேன் என்று தான் சொல்லுவார்கள். அந்த நடைமுறை இப்போதும் உண்டு. தமிழ் நாட்டுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இன்றைய தமிழர்கள் கூட ஊருக்குப் போகிறேன் என்று தான் சொல்லுகிறார்களே தவிர தமிழ் நாட்டுக்குச் சுற்றுப் பயணம் செய்யப் போகிறேன் என்று சொல்லுவதில்லை.
இது காலாகாலமாக உள்ள நடைமுறை. ஊர் என்றால், தமிழ் நாட்டை ஏதோ பக்கத்து ஊர் என்று அர்த்தத்தில் தான் இங்குள்ள தமிழர்கள் சொல்லிப் பழகிவிட்டனர். தமிழ் நாடு, அது வேறு ஒரு நாடு, என்பதற்குப் பதிலாக தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்பது போல ஓர் அர்த்தத்தில் தான் அவர்கள் சொல்லுகின்றனர்.
உள் நாட்டில் தங்களது சொந்த ஊருக்குப் போக வேண்டுமென்றால் "ஊர்" என்று அவர்கள் சொல்லுவதில்லை. "கம்போங்" என்கிற வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர். அல்லது தங்களது ஊரின் பெயரைப் பயன்படுத்துகின்றனர். உதாரணம்: மலாக்கா, தைப்பிங், பினேங், கே.எல். ஜே.பி. இப்படித்தான் அது போகும். ஆனால் இங்குள்ள தமிழர்களுக்கு ஊர் என்றால் அது தமிழ் நாடு மட்டும் தான் அதில் எந்தக் குழப்பமும் தேவை இல்லை.
அப்படிப்பார்த்தால் தமிழ் நாட்டிலிருந்து இங்கு வந்து வேலை செய்பவர்களை இங்குள்ளவர்கள் எப்படி அழைப்பார்கள்? ஊர்க்காரர் என்று தான் அழைப்பார்கள்? அதில் என்ன தவறு? அதில் என்ன இழிவைக் கண்டீர்கள். பெயர் தெரிந்தால் பெயரைச் சொல்லி அழைக்கலாம். எனது நீண்ட நாள் நண்பரை அவர் பெயர் சொல்லித்தான் அழைப்பேன். அவரின் பெயர் எனக்குத் தெரியும் என்பதால். பெயர் தெரியாவிட்டால் 'தம்பி' என்பேன் அல்லது 'அண்ணாச்சி' என்று அழைப்பேன். அதுவும் தெரியாவிட்டால் 'ஊர்க்காரரே' என்று அழைப்பேன். உணவகங்களில் வேலை செய்பவர்களை 'தம்பி' என்று அழைப்பேன். இது எனது பாணி.
வழக்கம் போல எல்லாவற்றையும் தவறான கண்ணோட்டத்தோடு பார்ப்பது சரியல்ல. உங்களோடு வேலை செய்பவர்கள் உங்களை எப்படி அழைக்கிறார்கள் என்பது நீங்கள் அவர்களிடம் எப்படிப் பழகுகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. இதுவெல்லாம் சாதாரணப் பிரச்சனை. ஒருசிலர் மரியாதை இல்லாமலே பேசிப்பழகியவர்கள்! அதனால் எல்லா இடங்களிலும் அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள். அது அவர்கள் வளர்ந்த விதம்.
இதற்கெல்லாம் காரணம் யார்? நமது சினிமா படங்கள் தான். சினிமா படங்கள் தான் நமது வழிகாட்டி.
அதனால் 'ஊர்க்காரரே' என்றால் ஏதோ இழிவான வார்த்தையைப் பயன்படுத்துகிறோம் என்று கற்பனை செய்து கொள்ளாதீர்கள். அது நல்ல சொல் தான்.
No comments:
Post a Comment