நாட்டில், உலகில் என்ன நடக்கிறது, தமிழ் கூறும் நல்லுலகில் என்ன நடக்கிறது என்பதை நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
அப்படியெல்லாம் தேவையில்லையே என்று நினைத்தால் குறைந்தபட்சம் நமது நாட்டில் என்ன நடக்கிறது என்பது பற்றியெல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். நாட்டு நடப்பு என்பது முக்கியம்.
இன்று நாட்டில் பல பிரச்சனைகள் இந்தியர் பிரச்சனைகளாகவே இருக்கின்றன. அல்லது நம்மை நோக்கியே தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. எதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆசையில்லை என்றால் நீங்கள் ஆபத்தை நோக்கி நகர்கிறீர்கள்.
உங்களுக்கு நாட்டு நடப்பு தெரிந்தால் நீங்கள் எல்லாவற்றிலும் எச்சரிக்கை உணர்வோடு இருப்பீர்கள். பள்ளிகளில் படிக்கும் உங்கள் வீட்டுப்பிள்ளைகள் ஏதேனும் பிரச்சனைகளை எதிர்நோக்குகிறார்களா என்பதை அவர்களோடு பேசி தெரிந்து கொள்ள வேண்டும்.
நாட்டில் அரசியல் எந்தத்திக்கை நோக்கி நகர்கிறது, நமக்கு யார் வேண்டும், யாரை ஒதுக்க வேண்டும், நமக்கு உதவும் நபர்கள் யார், நம்மை எதிர்க்கும் நபர்கள் - இவர்கள் தெரிந்தால் தான் நாம் சரியான நபர்களை தேர்தல் வரும்போது தேர்ந்தெடுக்க முடியும்.
எல்லாமே அரசியல் தான். அரசியல் இல்லாமல் எதுவும் நகராது. அதில் நம் பங்கு நிச்சயம் வேண்டும். கூட்டம் கூடி தான் அரசியல் பேச வேண்டும் என்பதில்லை. மற்றவர்களோடு பேசும் போதே நாம் பலவற்றைக் கற்றுக் கொள்கிறோம். தெரிந்து கொள்கிறோம் அதுவே போதுமானது. நம்முடைய முடிவுகளை நாமே எடுக்க வேண்டும். எவனும் நமக்குப் பிச்சை போட வேண்டாம். பிச்சை போடுபவன் அயோக்கியன் என்று மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்!
இன்று நம் சமுதாயம் பலவற்றை இழந்து நிற்கிறது. யார் யாரையோ நம்பினோம். அரசாங்கம் பலவற்றைச் செய்தது. ஆனால் எதுவும் பயனிக்கவில்லை. அரசியல்வாதிகள் நம்மை முச்சந்திக்குக் கொண்டு வந்து விட்டார்கள்.
இதற்குக் காரணம் நாம் அரசியலைப் புரிந்து வைத்திருக்கவில்லை. சும்மா தலையாட்டிகளைப் போல் 'ஆமாம்' போட்டுக் கொண்டு அரசியல்வாதிகளை அதிகம் நம்பினோம். அப்போது அப்படி நடந்தது என்பது உண்மை தான். ஆனால் இப்போது அப்படி அல்லவே! என்று சொல்லாதீர்கள். இப்போதும் அதே கதை தான்! யாரையோ ஒருவரை நம்பும் போக்கு இப்போதும் உண்டு. நம்பலாம் ஆனால் ஒருவரை மட்டும் தான் என்று சிந்திக்கும் போக்கு அபாயகரமானது.
நான் ஒன்று சொல்லவா? யாரை நம்பலாம் என்பதை தேர்தல் வரும் போது பார்த்துக் கொள்ளுங்கள்! அப்போது நீங்கள் முடிவு செய்யுங்கள்! உங்களது வாக்கை அளியுங்கள். அந்த அரசியல் போதும். மற்ற நாள்களில் உங்களது பிழைப்பைப் பாருங்கள்! அது தான் உங்களை உயர்த்தும். அரசியல்வாதி உங்களை உயர்த்த மாட்டான்!
No comments:
Post a Comment