Tuesday 15 August 2023

வரவேற்கிறோம்!

 

                                      Jagdeep Singh Deo, Penang Deputy Chief Minister II

பினாங்கு மாநிலத்தின் துணை முதலவர் (II) ஆக, ஒரு சீக்கியரான ஜக்தீப் சிங் தியோ பதவியேற்றிருக்கிறார்.  இதற்கு முன்னர் பேராசிரியர் இராமசாமி அவர்கள் ஏற்றிருந்த பதவி என்பது பெரும்பாலான தமிழர்கள்  அறிந்தது தான்.

இந்த நியமனம் மூலம் ஜ.செ.க. புதியதொரு பாதையை நோக்கி செல்கிறது என்று சொல்லலாம். இந்த நியமனம் அதாவது துணை முதல்வர் பதவி என்பது தமிழருக்கு மட்டும் உரியது அல்ல  தமிழர் அல்லாத பிற  இந்திய சமூகத்தினருக்கும் உரியது என்பதை இந்த நடவடிக்கை மூலம் ஜ.செ.க. செயலில் காட்டியிருக்கிறது.

இந்த நியமனத்தின் மூலம் ஏமாந்தவர்கள் என்றால் அவர்கள் தமிழர்கள் தான். இது தமிழருக்கான நிரந்தரமான ஒரு பதவி என்பதாகத்தான் நாம் நினைத்துக் கொண்டிருந்தோம். அது அப்படி அல்ல என்பதை ஜ.செ.க. தலைமைத்துவம் காட்டிவிட்டது.

பொதுவாக இந்த நியமனத்தை  தமிழர் சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லை  என்பதை அவர்கள் தங்களது மௌனத்தின் மூலம் காட்டிவிட்டார்கள். ஆமாம் பேச ஒன்றுமில்லை! நம்மிடம் எந்த பலமும் இல்லை! அரசியலும் நம் கையில் இல்லை! என்ன தான் செய்ய முடியும்?

ஆனால் தனிப்பட்ட முறையில் நமக்கு ஜக்தீப் சிங் அவர்களிடம் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. அவருடைய திறமையில் நமக்கு எந்த கேள்வியும் இல்லை.  அவரின் சேவையில் நமக்கு எந்த குழப்பமும் இல்லை.  கர்ப்பால் சிங் குடும்பம் என்றாலே  யாரும் அவர்களைக் குறை சொல்ல  வழியில்லை. பினாங்கு மட்டும் அல்ல மலேசிய அளவிலும் அவர்கள் புகழ் பெற்றவர்கள்.

ஜ.செ.க. புதிய பாதையை நோக்கி அடி எடுத்து வைக்கிறது  என்று ஏன் நாம் சொல்லுகிறோம் என்றால்  அது ஒரு சீனர்கள் கட்சி என்று சொல்ல முடியாத மாதிரியான  ஓர் இலக்கை நோக்கிப் பயணிக்கிறது  என்று அர்த்தம் கொள்ளலாம். வருங்காலங்களில்  பினாங்கு மாநிலத்தின் முதல்வர் சீனராக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஏன் இன்றைய துணை முதல்வர் நாளை முதல்வராகக் கூட வர வாய்ப்பிருக்கிறது. இல்லை என்று சொல்ல முடியாது. இது சாத்தியமே. ஜ.செ.க. பல்லின கட்சி என்கிற அடையாளத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்றால் இந்த மாற்றங்கள் அவசியமே.

குறிப்பிட்ட பதவி குறிப்பிட்ட இனத்துக்குத்தான்  என்கிற நம்மிடையே ஊறிப்போன எண்ணங்கள் எல்லாம் இனிமேல் தவிடுபொடியாகிவிடும் என நாம் நம்பலாம். ஜ.செ.க. அதனை நோக்கிப் பயணிக்கிறது என்பதில் ஐயமில்லை.

ஆனால் நம் மக்களுக்கு நாம் சொல்லுவது எல்லாம் துணை முதல்வரைப் புறக்கணிக்க வேண்டாம்.  அது நமக்குப் பாதிப்பைத்தான் ஏற்படுத்தும். வழக்கம் போல, இதற்கு முன்னர் பேராசிரியர் இராமசாமியை எப்படி நாம் பயன்படுத்திக் கொண்டோமோ, அதே போல இன்றைய துணை முதல்வரையும்  நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவர் எல்லாப் பினாங்கு மக்களுக்கும் உரியவர். அதே போல நம் இந்தியர்களுக்கும் உரியவர்.

புதிய துண முதல்வர் 11,ஜக்தீப் சிங், அவர்களை வரவேற்கிறோம்! வாழ்த்துகிறோம்!

No comments:

Post a Comment