தயவு செய்து குழந்தைகளைக் குழந்தைகளாகவே இருக்க விடுங்கள்.
உங்களுடைய ஆசைகளையெல்லாம் அவர்கள் மீது திணிக்காதீர்கள். அதைத்தான் பெற்றோர்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். கேட்க நாதியில்லை!
ஆனால் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்று நம்மைக் கதிகலங்க வைத்திருக்கிறது. அதுவும் புண்ணிய தலத்தில்!
நமது கோவில் திருவிழா ஒன்றில் இந்நிகழ்ச்சி அரங்கேறியிருக்கிறது. வழக்கம் போல நமது பெற்றோர்களின் கைங்கரியம் என்பது தான் இதில் விசேஷம்.
மது கலந்த போத்தலை அந்தக் குழந்தையின் வாயில் ஊற்றி பக்திக்கே ஒரு புதிய வழியைக் காட்டியிருக்கிறார்கள்! அடேய்! உன் மது பக்தியை உன்னோடு வைத்துக் கொள்! ஒரு குழந்தையிடமா காட்டுவது? என்ன ஒர் அநாகரிகம்!
எப்படிப் பார்த்தாலும் அந்தக் குழந்தையின் பெற்றோரின் அனுமதி இல்லாமல் அது நடக்க வாய்ப்பில்லை. ஏதொ ஒரு குடிகாரன் அந்தக் குழந்தையின் வாயில் மதுவை ஊற்றுவதைப் பார்க்காமல் இருக்க முடியாது. அதன் பெற்றோர்கள் மட்டும் பார்க்காமலா இருந்திருப்பார்கள்?
உண்மையில் அது ஒர் அதிர்ச்சியான சம்பவம். மதுபானத்தை ஒரு குழந்தையின் வாயில் திணிப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனைக் கொடுத்தவன் ஒரு குடிகாரன். அவனுக்கு அதில் ஒரு சந்தோஷம். பெற்றோர்களும் அதனைப் பார்த்து சந்தோஷப் பட்டிருப்பார்கள் என்று நிச்சயமாக நாம் நம்பலாம்! இதனை அறியாமை என்று சொல்லுவதா அல்லது குடிகாரக் கூட்டத்தின் கூத்தடிப்பு என்று சொல்லுவதா?
கோவில்களில் இப்படி எல்லாம் நடந்தால் கோவில்கள் மீது யாருக்கு மதிப்பு மரியாதை வரும்? தேவை இல்லை என்கிறீர்களா? ஆமாம் குடிகாரன் அப்படித்தான் சொல்லுவான்! அது ஒரு நாதாரிக் கூட்டம்! ஆனால் நல்லவர்கள் அப்படிச் சொல்லத்தான் முடியுமா? அவனது குடிகார ஆட்டத்தை புண்ணிய தலங்களிலா காட்டுவது?
நம்மைக் கேட்டால் இதற்குக் காவல்துறை தான் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கும் நமது சமயத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. குடித்துவிட்டு ஆடுவதை நாம் பக்திப்பரவசம் என்று எடுத்துக் கொள்ள முடியாது. அதுவும் குழந்தைகளுக்கு இப்படி வற்புறுத்தி மது அருந்த வைப்பதை நிச்சயமாக அது குழந்தை சித்திரவதை சட்டத்தின் கீழ் தான் வரும்.
குடிகாரர்கள் குழந்தைகளை என்ன என்ன அநியாயம் பண்ணுகிறார்களோ அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். சிறு குழந்தைகளுக்குப் போதையைக் கொடுத்து சீரழிப்பவர்களைக் கடுமையான தண்டனைக்கு உட்படுத்த வேண்டும்.
குழந்தைகளைக் குடிக்கு அடிமையாக்காதீர்கள்! கடவுள் உங்களைக் கடுமையாகத் தண்டிப்பார்!
No comments:
Post a Comment