தேர்தல் பிரச்சாரங்கள் அனல் பறக்கின்றன. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இதெல்லாம் நடப்பது வழக்கமான ஒன்று தான்.
ஒரு வித்தியாசம். இம்முறை ம.இ.கா. குரல் கேட்கவில்லை. வருத்தம் தான்.
நான் முதன் முதலாக தேர்தலில் வாக்களித்த போது அப்போது ம.இ.கா.வின் சார்பில் ரந்தாவ், நெகிரி செம்பிலான் மாநிலத்தில் போட்டியிட்ட மாண்புமிகு அய்யாக்கண்ணு அவர்களுக்குத்தான் எனது முதல் வாக்கை செலுத்தினேன். அதாவது 1964-ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில். அப்போது நான் ம.இ.க. கிளை ஒன்றில் செயலாளராகவும் இருந்தேன். ஆனால் அப்போதைய எங்களது ஹீரோ என்றால் முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் லீ கு வான் யூ தான்! அவர் சிரம்பான் வருகிறார் என்றால் அது தேர்த்திருவிழா தான்! அதாவது இப்போதைய நமது பிரதமர் அன்வார் இப்ராகிம் மாதிரி!
அந்த காலகட்டத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் என்றாலே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தும். எதுவும் நடக்கும். அதுவும் குறிப்பாக பினாங்கு, மலாக்கா, சிங்கப்பூர் போன்ற சீனர்கள் அதிகம் வாழும் நகரங்கலில் ஏதாவது அசம்பாவிதங்கள் நடக்கவே செய்யும்.
அதெல்லாம் கடந்தகால நினைவுகள். இப்போதெல்லாம் எந்த அசம்பாவிதமும் நடப்பதில்லை. அந்த அளவுக்கு காவல்துறை ஒவ்வொரு நிமிடமும் கண்காணித்துக் கொண்டிருக்கிறது. தாராளமாகவே பிரச்சார கூட்டங்களுக்குப் போகலாம்.
ஒரே ஒரு பின்னடைவு என்னவென்றால் பிரச்சாரம் செய்யும் அரசியல்வாதிகளை யாரையும் நம்ப முடிவதில்லை. எல்லாருமே கொள்ளையடிக்கும் கொள்ளைக்காரர்களாகவே இருக்கின்றனர்!
நான் நீண்ட நாள்களாகவே எந்தப் பிரச்சாரக் கூட்டங்களுக்கும் போவதில்லை. யாருக்கு வாக்களிப்பது என்று ஒரு முடிவுக்கு வந்து விட்டோம். பிரச்சாரக் கூட்டங்களுக்குப் போவதால் ஏதும் புதிதாக தெரிந்து கொள்ளப்போவதில்லை. அயோக்கியன் யோக்கியன் போன்று பேசுவதையெல்லாம் இனி காதுகொடுத்துக் கேட்கத் தயாராக இல்லை!
இன்றைய பிரச்சார கூட்டங்கள் என்றாலே ஏதோ சோத்துமாடுகளின் கூட்டம் என்கிற உணர்வு தான் வருகிறது. ஒரு கம்பீரம் இல்லை. அவர்களிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை. எப்படியோ கூட்டங்கள் அமைதியாக நடந்தால் சரி. நல்லது நடந்தால் சரி.
அனல் பறக்கட்டும்! அது அமைதியாகப் பறக்கட்டும்!
No comments:
Post a Comment