விலைவாசி ஏற்றம் என்பது நீண்ட நாள்களாக உள்ள பிரச்சனை. இன்றைய அரசாங்கம் அதனைப் பல வழிகளில் சமாளித்து வருகிறது.
ஆனால் யாரும் எதிர்பார்க்காத ஏற்றம் என்றால் அது அரிசியாகத்தான் இருக்க வேண்டும். வெகு விரைவில் அதன் விலை மலேசியர்களைத் திணறடிக்கும் என்று எதிர்பாக்கலாம்.
அரிசி என்பது மிக மிக அத்தியவாசியமான பொருள். மலேசியர்களின் அத்தியாவசிய உணவு. ஏழை பணக்காரன் என்கிற பேதம் இல்லை. அனைவருக்கும் பொதுவான உணவு.
இத்தனை ஆண்டுகள் விலைவாசி ஏற்றம் என்றால் அது ஏற்றம் இறக்கமாக இருக்கும். அதனைத்தான் நாம் அனுபவித்திருக்கிறோம். ஆனால் அரிசி நமக்கு அப்படி ஒரு நிலையை ஏற்படுத்தியதில்லை. அதற்கும் இப்படி ஒரு சோதனையா என்று நினைக்கும் போது கொஞ்சம் அதிர்ச்சி தான்.
அதுவும் நமது பெண்களை நினைக்கும் போது இன்னும் வருத்தம் தான் அதிகரிக்கிறது. விருந்துகளில் நாம் கண்களால் பார்க்கிறோம். என்ன அலட்சியம். கொஞ்சம் கூட உணவுக்கு மரியாதையே இல்லை. அப்படியே கொண்டு போய் குப்பைகளில் கொட்டும் பழக்கம் நமது பெண்களுக்கு எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை. நமது உள்ளம் கூட நொறுங்கிப் போகும். உணவுக்காக ஏங்கும் கோடிக்கான மக்களை நாம் உலகம் எங்கிலும் பார்க்கிறோம். ஆனால் நாம் அந்த உணவுக்குக் கொடுக்கும் மரியாதை என்ன?
நாம் எவ்வளவோ சொல்லுகிறோம். ஆனால் அதனை அலட்சியமாகத் தான் பார்க்கிறார்களே தவிர அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. தட்டுகளில் நிறைய அத்தனை வகையறாக்களையும் போட்டு நிரப்பிக் கொண்டு கடைசியில் பாதி கூட சாப்பிடுவதில்லை. அப்படியே குப்பைத் தொட்டிக்குத்தான் கொண்டு போய் கொட்டுவார்கள். சிறு குழந்தைகளுக்கு ஏதோ பெரிய மனிதர்கள் சாப்பிடுவது போல தட்டு நிறைய திணித்துவிட்டு அதுவும் கடைசியில் குப்பைத்தொட்டி தான் அடைக்கலம்.
ஒரு பெண்மணியிடம் இது பற்றி பேசியபோது அவர் சொன்ன பதில்: ஆமா, மொய் கொடுக்கிறோம். கொஞ்சமா எப்படி சாப்பிடுவது? மொய் காசுக்கு எதையாவது சாப்பிடுணுமே! கொட்டணுமே! அப்ப தான் நிம்மதியா இருக்கும்! என்கிறார்.
அரிசி விளைவதற்கு எத்தனை பேர் உழைக்கிறார்கள். அரிசியை விளைவிக்கும் அந்த விவசாயிக்குக் கூட சாப்பிட அரிசி கிடைப்பதில்லை என்பதையெல்லாம் அறியாதவர்களை என்ன செய்வது?
அரிசியின் விலையேற்றம் ஒரு வேளை அவர்களைத் திருத்தலாம்!
No comments:
Post a Comment