Monday 14 August 2023

ஏழை குழந்தைகளுக்கென்று பள்ளிக்கூடமா?

 

ஏழைக் குழந்தைகளுக்கென  தனி பள்ளிக்கூடமா?  அரசாங்கம் இன்னும் கொஞ்ச அதிகமாகவே சிந்திக்க வேண்டும்.

ஏழைக் குழந்தைகளின் மேல் உள்ள அரசாங்கத்தின் கரிசனத்தை  நாம் குறைத்து மதிப்பிடவில்லை.  நமக்கும் அந்தக் கரிசனம் உண்டு.

ஆனால் இப்போது உள்ள பள்ளிக்கூடங்கள்  பணக்காரர்களின் பள்ளிக்கூடங்களா என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியது  அரசாஙத்தின் கடமை. ஒவ்வொரு கிராமங்களிலும் உள்ள பள்ளிக்கூடங்கள் அந்தந்த கிராமப்பகுதிகளில் உள்ள குழந்தைகள் தானே அங்கே கல்வி கற்கின்றனர்.  தோட்டப்புறங்களில் உள்ள பள்ளிகளை எடுத்துக் கொள்வோம். அங்கே எந்தப் பணக்கார வீட்டுப் பிள்ளைகள்  கல்வி கற்கிறார்கள்?  அவர்கள் எல்லாம் ஏழைத் தோட்டப்புற மாணவர்கள் தானே!
 
கிராமப்புற மாணவர்களின் கல்வியின் மீது அக்கறை கொள்வது என்பது வேறு. ஆனால் அவர்களை பணக்காரர்-ஏழை என்று பிரிப்பது வேறு. அவர் கல்வியில் பின் தங்கியவர்களாக இருந்தால் அதனைக் களைய எல்லா முயற்சிகளும் எடுக்க வேண்டும்.

இன்று  நாடளவில் அல்லது உலக அளவில் எடுத்துக் கொண்டாலும் சரி மாணவர்கள் ஏன் சீருடை அடைய வேண்டும் என்று பணிக்கப்படுகிறார்கள்?  பள்ளிகளில் பணக்காரன் ஏழை என்கிற பாகுபாடு இருக்கக்கூடாது என்பதற்காகத்தான்.  கல்வி என்பது பொது. அது பணக்காரனுக்கோ ஏழைக்கோ தனித்தனி என்கிற வித்தியாசமின்றி கற்பிக்கப்பட வேண்டும்.  அதனால் தான் இன்று நாம் பொதுவான சீருடைகளை அணிகிறோம். நோக்கம்  கல்வி கற்பதில்  பாகுபாடு  இல்லை. அது ஒன்றே காரணம்.

ஏழைகளுக்கென்று தனிப்பள்ளிக்கடம் என்று அமைந்தால்  இன்னொரு பிரச்சனையைக் கிளப்பி விடுவார்கள். இவன் இந்தப் பள்ளியில் இருந்து வந்தவன், இவன் ஏழை, பொல்லாதவன் இவனுடன் சேரக்கூடாது என்று புதிதாக பல பிரச்சனைகள் தோன்றும். ஏழை மாணவர்கள் புறக்கணிக்கப்படுவார்கள். அவர்களிடம் பேசுவதே  பாவம் என்கிற  கர்வமும் பணக்கார மாணவர்களுக்கும் ஏற்படும்.

இவைகள் எல்லாம் நமக்குத்  தேவையற்ற ஒன்று.  ஏழையோ பணக்காரனோ அவனவனுக்குத் தனிப்பள்ளிகளாக இல்லாமல் எல்லாருக்குமே பொதுவான பள்ளிக்கூடங்கள் தான் நமது எதிர்கால நலன்களுக்கு நல்லது.  சிறு வயதிலேயே ஏழை பணக்காரன் என்று பிரித்து  அதனையே பிற்காலத்தில் அவனது அடையாளமாக மாறிப்போகும் சாத்தியம் உண்டு.

இல்லை!  நமக்குத் தேவை பொதுவான ப்ள்ளிக்கூடங்கள். அது கல்வி கற்க.  ஏழை பணக்காரன் என்று பிரித்துப் பார்க்க அல்ல. சிறப்பான கல்வி கற்க வேண்டுமென்றால் சிறப்பான ஆசிரியர்கள், திறமையான ஆசிரியர்கள் தான் வேண்டும். அதனை விடுத்து பள்ளிக் கட்டுவது அல்ல.!

No comments:

Post a Comment