Friday 11 August 2023

குறைபாடா? பெரிதுபடுத்தாதீர்கள்!

 

உணவகங்களில் ஏதாவது தவறுகள் நடக்கத்தான் செய்யும். எந்த உணவகங்களாக இருந்தாலும் சரி. ஒன்று விலை கூடுதலாக இருக்கும். அல்லது வேறு ஏதாவது குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும்.

இன்றைய காலகட்டத்தில் விலை கூடுதல் என்பது தான் பெரிய குற்றச்சாட்டு. வியாபாரிகளுக்கு 'ஏன் விலையை ஏற்றினோம்!' என்பதற்கு  ஆயிரம் காரணங்கள் உண்டு.  அதையெல்லாம் நாம் பார்ப்பதில்லை. சம்பளம் ஏறவில்லையே என்று சொல்லுவதும்  மீண்டும் மீண்டும் சாப்பிடுவதும் குறைசொல்லுவதும் எந்தக் குறைச்சலும் இல்லை!

குறிப்பாக விலை கூடுதல் என்கிற குற்றச்சாட்டைப் பற்றி இங்கு நாம் பேசுவோம். நமக்கும் அந்தக் குற்றச்சாட்டில் நியாயமுண்டு என்பது தெரியும். நம்மில் பெரும்பாலோர் நாம் சாப்பிட்ட அந்த உணவகத்தில்  உணவு  திருப்திகரமாக இருந்தால் நாம் அந்த உணவகத்தைக் குறை சொல்லுவதிலலை.  விலை கூடுதல் என்றாலும் 'உணவு நன்றாக இருந்தது' என்று பாராட்டிவிட்டுத்தான் வருவோம்.  சரி பணத்தைக் கொட்டிக் கொடுத்தும்  உணவு சுவையாக இல்லாமல் இருந்தால்  என்ன செய்வோம்?  மீண்டும் அந்தக் கடைக்குப் போவதை நிறுத்தி விடுவோம்!  அந்த உணவகத்துக்கு நாம் செய்கின்ற உதவி  அதுதான்!  வெளியே போய் பறை அடிப்பதில்லை!

ஒரு சிலரைப் பார்க்கும்போது  அவர்கள் செய்வதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. குறிப்பிட்ட அந்த உணவகத்தின் பெயரை நாறடிப்பதில் குறியாய் இருக்கின்றனர். அந்த உணவகத்தின் பெயரைச் சொல்லி, முகவரியைச் சொல்லி, அவர்களின் உணவைக் குறை சொல்லி, அந்த உணவின் விலையைக் குறைசொல்லி, அதனை பரபரப்பான செய்தியாக்கி  அந்த உணவகத்தின் பெயரையே நாசமாக்கி விடுகின்றனர்.  இது ஒரு தவறான செயல் என்றால் அவர்கள் ஏற்கப்போவதில்லை.  "நாங்கள் பணம் போட்டுத்தானே வாங்குகிறோம்" என்று  நியாயம் பேசுவார்கள்!

ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.  இவ்வளவு நேரம் அவர்கள் நியாயம் பேசியதெல்லாம் இந்திய உணவகங்கள் பற்றிதான். அதுவே சீனர் உணவகம், மலாய் உணவகம் என்றால் எந்த நியாயமோ, எந்தப் பணமோ எதுவுமே அவர்களுக்கு ஞாபகத்திற்கு வருவதில்லை! அதைப் பற்றியெல்லாம் தங்களுக்குள்ளே அனைத்தையுமே அடக்கிக் கொள்ளுவார்கள்!  வீரமெல்லாம் இந்திய உணவகத்தினர் மீது தான்! நீதி, நியாயம் பற்றிய ஞாபகம் வருவதில்லை.

அது என்னவோ தெரியவில்லை. குறை சொல்லுவதென்றால் இந்திய ஊணவகங்கள் மீது மட்டும் தான்.  இந்திய உணவகங்கள் மட்டும் தான் கண்ணுக்குத் தெரியும். வீரம் தெரியும்.  விவேகம் தெரியும். தங்களின் வீர விளையாட்டைக் காட்டுவார்கள்!

எந்த ஒரு இந்திய நிறுனங்களின் மீதும் உங்களுக்குக் குறைபாடுகள் இருந்தால் அவர்களிடம் மீண்டும் போகாதீர்கள்.  குறைகளை அவர்களிடம் சுட்டிக் காட்டுங்கள். அத்தோடு உங்களுடைய வேலை முடிந்தது. திருந்துவதும், திருந்தாததும் அவர்களைப் பொறுத்தது. அவ்வளவு தான்.

நோக்கம் எல்லாம் ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுத்து இந்தியர்களின் பெயரைக் கெடுக்காதீர்கள். அவ்வளவ் தான்.


No comments:

Post a Comment