பினாங்கு மாநிலத்தில் நடைபெற்ற பிரதமர் உடனான ஒரு கலந்துரையாடலில் ஓர் இந்திய மாணவி மெட் ரிகுலேஷன் கல்வி ஒதுக்கீடு சம்பந்தமான விஷயத்தைக் கேள்வியாக எழுப்பி இருந்தார்.
அதற்கு மழுப்பலாகப் பதிலளித்த பிரதமர் ஓர் உண்மையையும் ஒப்புக் கொண்டார். மலாய் வாக்களர்கள் அதற்கு ஆதரவாக இருக்கமாட்டார்கள் என்கிற உண்மையையும் ஒப்புக்கொண்டார்! நாமும் இதனை எதிர்பார்த்தது தான்!
நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இன்னும் நீண்டகாலம் அரசியலில் இருக்கப்போகும் மாண்புமிகு கணபதி ராவ் வீரமான் அதுபற்றி என்ன கருத்துரைத்தார்? "அந்த மாணவிக்கு அன்வார் கொடுத்த பதில் சரியானதுதான். இந்திய மாணவர்கள் மெட் ரிகுலேஷன் ஒதுக்கீடு குறித்து கேள்விகள் எழுப்பி நேரத்தை வீணடிக்க வேண்டாம்" என்று கணபதிராவ் கருத்துரைத்து உள்ளார்.
நாம் அவரிடம் கேட்கும் கேள்வி என்னவென்றால் இத்தனை ஆண்டுகள் எதிர்கட்சியாக இருந்தபோது இதே கேள்வியை நீங்களும் கேட்டவர் தானே? இப்போது பதவியில் இருக்கும் போது மட்டும் நீங்கள் ஏன் தடம் மாறுகிறீர்கள்?
நீங்கள் செய்ததைத் தானே ம.இ.கா. காரனும் செய்தான்? அப்போது அவனை வறுத்து எடுத்தீர்களே! ஆக பதவியில் இருக்கும் போது ஒரு பேச்சு! எதிர் அணியில் இருக்கும் போது ஒரு பேச்சு! நாங்கள் யாரும் இதனை எதிர்பார்க்கவில்லையே!
இதனைத் தொடர்ந்து பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று மாணவர்களைப் பார்த்துப் பேசுவது வீண் தான் என்பது எனக்கும் புரிகிறது. அதை விடுங்கள். இதற்கான தீர்வு தான் என்ன என்பதற்காவது உங்களிடமோ, உங்கள் கட்சியினரிடமோ பதில் உண்டா?
நீங்கள் இருக்கும் நிலைமையில் உங்களால் இதற்கான தீர்வையோ, நிரந்தரமான பதிலோ இனி கிடைக்காது என்பது நன்றாகவே புரிகிறது. காரணம் நீங்கள் வகிக்கும் பதவி உங்களைப் பேச விடாமல் செய்கிறது என்பது புரிகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இதனை ஒரு பிரச்சனையாக, விவாதப்பொருளாக ஆக்கிக் கொண்டிராமல் அதற்கான ஒரு தீர்வை கண்டே பிடிக்க முடியாதா? பேசித் தீர்த்துக் கொள்ள முடியாதது ஏதாவது உண்டோ? என்னைக் கேட்டால் ஒவ்வொரு ஆண்டும் 2500 இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்கிற ஒரு முடிவுக்கு வரலாம். முன்னாள் ம.இ.கா. தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேல் அவர்களின் தலைமைத்துவத்தின் காலத்தில் ஒதுக்கப்பட்ட அதனையே ஒரு முடிந்த முடிபாக வைத்துக் கொள்ளலாம் அல்லவா? தேவை ஏற்படும் போது மாற்றம் செய்யலாமே. முடியுந்தானே?
கணபதிராவ் அவர்களின் தீடீர் மன மாற்றத்திற்காக வருந்துகிறோம்!
No comments:
Post a Comment