Tuesday 22 August 2023

சட்டங்களைச் செயல்படுத்துங்கள்!

சட்டங்கள் இருந்தால் மட்டும் போதாது. அவை அமல்படுத்தப்பட  வேண்டும்.  அமலில் இல்லையென்றால்  அதற்குக்  காரணங்கள் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது.  பிரச்சனைகளைக் களைவதற்கான  முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.

கடைகளில் பொருள்களின் விலைப் பட்டியலை வைக்க வேண்டும் என்பது கட்டாயம். ஆனால் அது கடைகளில் வைக்கப்படுகின்றதா என்று பார்த்தால் அதுபற்றி யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு கடையிலும் வெவ்வேறு முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.  சில கடைகளில் அந்தப் பட்டியலை எப்படியெல்லாம் மறைக்க முடியுமோ  அப்படியெல்லாம் மறைக்கப்படுகின்றன.  

 இதற்கெல்லாம் ஒரே காரணம் இப்போழுது விலைப்பட்டியல் தேவை இல்லை என்கிற நிலைமைக்கு வியாபாரிகள் வந்துவிட்டார்கள்.  ஆனால் நமக்குத் தெரிந்தவரை விலைப்பட்டியல் கட்டாயம் என்கிற நிலைமையில் நாம் இருக்கிறோம்.  காரணம் வியாபாரிகள் ஒரு சில மாதங்களுக்கு முன்னரே  'விலையேற்றம் வருகிறது' என்று சங்கூத ஆரம்பித்துவிட்டார்கள்!  அதனால் எந்த  நேரத்திலும் விலைகளைக்கூட்ட அவர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள்.

அரசாங்க அனுமதி இல்லாமல் விலை ஏற்றம் இல்லை என்று பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும். அரசாங்கம் பொருள்களின்  விலையேற்றத்தை மட்டுப்படுத்த பலவேறு நடவடிக்கைகள் எடுக்கின்றன. அதனால் தான் இதுநாள் வரை பெட்ரோலின் விலை கட்டுப்பாட்டில் உள்ளது. எப்படிப் பார்த்தாலும்  விலையேற்றம் இல்லாமல் இருக்க   அரசாங்க நடவடிக்கைகள் எடுக்கின்றன.

ஆனால் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் வியாபாரிகள் விலைகளை ஏற்றினால்  அதற்கான நடவடிக்கைகளை  வியாபாரிகள் மீது எடுக்க வேண்டும். இன்றைய நிலையில் கடைகளில் பொருள்களை வாங்கினால் நமக்கு விலையே தெரிவதில்லை. அப்படியே நாம் ஏதேனும் கேள்விகளைக் கேட்டாலும் அவர்களிடமிருந்து மழுப்பலான பதில்கள் தான் வருகின்றன.

விலையேற்றம் வரும் முன்பே வியாபாரிகள் விலைகளை ஏற்றிவிட்டார்கள். இன்னும் விலைகள் ஏறுவதற்கான சாத்தியக்கூறுகள்  இருக்கின்றன. அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்கள்  சமாளிக்க முடியாதபடி பிரச்சனைகள் எழும்.

அரசாங்க அதிகாரிகள் களத்தில் இறங்க வேண்டும். விலைகளைச் சரி பார்க்க வேண்டும். அநியாய விலை ஏற்றம் செய்பவர்களைத் தண்டிக்க வேண்டும்.

இனி அரசாங்கத்தின் செயல்பாடு என்ன என்பது தான் முக்கியம்!

No comments:

Post a Comment