Saturday 12 August 2023

அம்னோ இனி எப்படியிருக்கும்?

 

சமீபத்திய ஆறு மாநில சட்டமன்றத்  தேர்தலில்  அம்னோ பலத்த அடி வாங்கியிருப்பது அதன் எதிர்காலத்தைக் கேள்விகுறியாக்கியிருக்கிறது!

அதன் தோல்விக்கு அம்னோ தலைவர் ஸாகிட் ஹாமிடி தான் காரணம் என்று பல்வேறு தரப்பிலிருந்து குரல் எழுப்பப்படுகின்றது. முதலில் அவர் மேல் இருக்கும் 30 க்கும் மேற்பட்ட ஊழல் வழக்குகள் தான்   மக்கள் கண் முன்  நிற்கிறது. 

என்ன தான் மூடி மறைத்தாலும்  அதனை பொது மக்கள் அவ்வளவு எளிதில் மறக்கப்போவதில்லை.  அது மட்டும் அல்ல ஸாகிட் ஹாமிடியைக் குறை சொல்லுவதின் மூலம் தங்களது ஊழல்களை  மூடி மறைத்து விடலாம் என்றும் அவரை எதிர்க்கும் தரப்பும் கணக்குப்போட்டு வைத்திருக்கிறது!

ஆனால் எதுவும் நடக்காது. ஊழல்வாதிகள் அம்பலம் ஆகும்வரை அம்னோவால் தலைதூக்க முடியாது.

இந்தச் சட்டமன்ற தேர்தலில்  அம்னோ மட்டும் போட்டியிட்ட இடங்கள் 108 தொகுதிகள். அவர்கள் வெற்றி பெற்ற இடங்களோ வெறும் 19 இடங்கள் மட்டுமே. இது ஆறு மாநிலங்களிலும் போட்டியிட்ட எண்ணிக்கை. இப்போது  ம.இ.கா.வுக்கு அவர்கள் ஏன் எந்தத் தொகுதியும்  ஒதுக்கவில்லை என்பது புரிந்திருக்கும். தொகுதிகள் ஒதுக்கவில்லை என்று மீண்டும் மீண்டும் அம்னோவைக் குற்றம் சொல்லுவதில் பயனில்லை. ஊழல்வாதிகளை மலாய்க்காரர்கள்  ஓரங்கட்டிவிட்டார்கள் என்பதைப் புரிந்து கொண்டால் போதும்.

ம.இ.கா.விலிருந்து வரிந்து கட்டிக்கொண்டு போய் பெரிக்காத்தான் கூட்டணில் சேர்ந்த நபர்களுக்கும்  இப்போது ஓரளாவது புரிந்திருக்கும்.  கெராக்கான் தலைவருக்கே எந்த மரியாதையும் கொடுக்காத அவர்கள்  இவர்களுக்கு என்ன தான் செய்யப்போகிறார்கள்? ஏதோ செனட்டர் பதவி கிடைத்தால்  அதையாவது  ஐந்து ஆண்டுகள் அனுபவித்திட்டுப் போகட்டும். சும்மா சேவை செய்ய வந்தோம் என்று சொல்லி உளறிக்கொண்டு இருக்காதீர்கள். சேவைக்கும் ம.இ.கா.வுக்கும்  என்ன சம்பந்தம்?

அம்னோ மானம்,மரியாதை எல்லாம் போய்விட்ட கட்சி.  அவர்கள் இப்போது இருக்கின்ற நிலைமையை வைத்தே 'எங்களுக்கு அந்தப்பதவி வேண்டும்! இந்தப்பதவி வேண்டும்!' என்கிற கோரிக்கையைத் தொடர்ந்து எழுப்பிக் கொண்டு தான் இருப்பார்கள்!  ஒற்றுமை அரசாங்கம் இவர்களது கோரிக்கை அனைத்தையும் நிறைவேற்றினால் ஆபத்து அரசாங்கத்திற்குத் தான். காரணம் மக்கள் ஆதரவு இல்லாத ஒரு கட்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்பது தான் கள நிலவர்ம்.

அம்னோ இனி முன்பு போல செயல்பட முடியாது என்பது திண்ணம். அவர்களுக்கான இடம் ஒற்றுமை அரசாங்கத்தில் அதிகம் என்பது தான்  உண்மை நிலவரம். இனி அம்னோவைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வருவது தான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு நல்லது.

இனி அம்னோ கட்சியை வளர்ப்பது என்பது இயலாத காரியம்! ஊழல் இல்லாதவர்கள் யாரும் கட்சியில் இருந்தால் ஒரு வேளை கட்சி மீண்டும் தலைதூக்கும்!

No comments:

Post a Comment