Thursday 18 October 2018

எதிரபார்த்தது நடந்திருக்கிறது...!

நாம் என்ன எதிர்பார்த்தோமோ அது நடந்திருக்கிறது! இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை! சீனர்கள் சீனர்களாகத்தான் இருப்பார்கள். நாம் மட்டும் தான் மலேசியர் என்று சொல்லிக் கொண்டு நமது இளிச்சவாயத் தனத்தைக் காட்டுபவர்கள்!  

சீனர்கள் அமைச்சர்களாக இருந்தாலும், அடுப்படி வேலை செய்பவர்களாக இருந்தாலும், மகான் என்று சொல்லும் சாமியர்களாக இருந்தாலும் - அவர்கள் சீனர்களுக்கு மட்டுமே உதவுபவர்களாகத் தான் இருப்பார்கள்!  மனிதம் என்றால், அவர்களைப் பொறுத்தவரை -  தங்களது சமூகத்திற்கு உதவுவது மட்டும் தான்!

மெங்கெளம்பு தமிழ்ப்பள்ளி பற்றியான ஒரு செய்தி. முடியும் தருவாயில் - போதுமான மானியம் இல்லாததால் -  பள்ளிக் கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டது  என்பது தான் அந்தச் செய்தி. அந்தக் கட்டுமானப் பணியை முடிக்க இன்னும் தேவை 14 இலட்சம் வெள்ளி மட்டுமே என்கிறார் பள்ளியின் வாரியத் தலைவர். ஒரு சீனப் பெண்மணியான, கல்வி துணையமச்சர் தியோ நீ செங்  அவர்களை பள்ளி நிர்வாகத்தினர் நாடிய போது "இனி மானியம் இல்லை!" எனக் கை விரித்து விட்டார் என்று அந்தச் செய்தி மேலும் கூறுகிறது!

அதே சமயத்தில் கலவி துணை அமைச்சர் பினாங்கு மாநிலத்தில் இரு புதிய சீனப் பள்ளிகள் நிர்மாணிக்க 230 இலட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்திருப்பதாக பத்திரிக்கைகளில்  செய்திகள் வெளியாகி இருப்பதாக கூறப்படுகிறது. 

ஒன்று நமக்குப் புரிகிறது. சீனப்பள்ளி நிர்மாணிக்க கல்வி அமைச்சிடம் பணம் இருக்கிறது. அதுவும் இரு சீனப்பள்ளிகள். ஆனால் ஒரு தமிழ்ப்பள்ளியின் கட்டுமானம் இறுதி கட்டத்தில் இருக்கும் போது அதை முடிப்பதற்குக் கல்வி அமைச்சிடம் பணம் இல்லை! 

இதற்குத் தான் தமிழ்ப்பள்ளிகளுக்காக ஒரு தனி கல்வி துணை அமைச்சர்  தேவை என்பதாக  பக்காத்தான் அரசு அமைந்ததிலிருந்து நாம் சொல்லி வருகிறோம். துணை அமைச்சர் சீனராக இருக்கும் போது  அவர் மொத்த பணத்தையும் சீனப்பள்ளிகளின் பக்கம் தள்ளி விடுகிறார்!   தேர்தலின் போது அவர்கள் சீனர்களை நம்பித்தான் தேர்தலில் நிற்கிறார்கள்.  அதனால் அவரைப் பொறுத்தவரை அவர் செய்வது சரி தான். ஜனநாயக செயல் கட்சியினர் இந்தியர்களுக்கு உதவி செய்வார்கள் என நாம் நம்பி விடக் கூடாது.  அவர்களைப் பொறுத்தவரை முதலில் சீனர்கள் அப்புறம் தான் இந்தியர்கள். முதல் உதவி அவர்களுக்கு. அதன் பின்னர் தான் "போனால் போகிறது"  என்று சில எலும்புத் துண்டுகள் நமக்கு!

பள்ளி வாரியத்திற்கு நம்முடைய ஆலோசனை எல்லாம் அவ்வளவு சீக்கிரத்தில்  கை கழுவி விடாதீர்கள். எத்தனை முகாந்திரங்கள் இருக்கின்றனவோ அத்தனையையும் முயற்சி செய்து பாருங்கள். விடா முயற்சி என்பது நாம் வாழ்க்கையில் கற்ற பாடம். அடி மேல் அடி அடித்தால்  அம்மியும் நகரும் என்பார்கள். அது சீனர்களிடம் இருக்கிறது. நாமும் அதனைக் கடைப்பிடிக்க வேண்டும். நாமும் அடி அடி என்று அடித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

புதிய சீனப்பள்ளிகளுக்கான மானியம் என்பது இப்போதைய  அவர்களின் வெற்றி.  அதற்காக நாம் தோல்வி அடைந்து விட்டோம் என்பதல்ல! நமக்கும் மானியங்கள் கிடைக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். தொடர்ந்து முயற்சிகளை மேற் கொள்ளுங்கள். 

தட்டிக் கொண்டே இருங்கள்> கதவுகள் திறக்கும். நாம் ஓர் அடிமை சமுதாயமாக இத்தனை ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறோம். இப்போது தான் அதிலிருந்து விடுபட்டுக் கொண்டிருக்கிறோம். 

கொஞ்சம் தாமதம் ஆகலாம். ஆனால் கண்டிப்பாக நடக்கும்!

No comments:

Post a Comment