Tuesday 30 October 2018

அம்னோவுக்கு எதிர்காலம் உண்டா...?

இப்போது மலேசியர்களிடம் உள்ள ஒரு கேள்வி "அம்னோ இன்னும் எத்தனை நாளைக்கு   உயிர் பிழைக்கும்?" என்பது தான். 

போகிற போக்கைப் பார்க்கின்ற போது அம்னோ இனி தாக்குப் பிடிப்பது கடினம் என்று தான் தோன்றுகிறது! டாக்டர் மகாதிர் அம்னோவை ஒழித்துக்கட்டுவதை முதன்மைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார்.

இப்போது அம்னோவில் நடக்கின்ற சம்பவங்களைப் பார்க்கின்ற போது அதற்கு சீக்கிரம் ஒரு முடிவு உண்டு என கணிக்கலாம் அம்னோவின் நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெகு விரைவில்  டாக்டர் மகாதிரின் பெர்சாத்து கட்சியில் இணைவார்கள் என பெர்சத்துவின் உச்சமன்ற உறுப்பினர் காதிர் ஜாசின்  கூறுகிறார். இந்தச் செய்திக்கும் மகாதிருக்கும் சம்பந்தமில்லை எனச் சொன்னலாம் இது நடக்கக் கூடிய சாத்தியம் உண்டு என அரசியல் பார்வையாளர்கள் கணிக்கின்றனர்.

அரசியலில் எதுவும் நடக்கலாம். அதுவும் அம்னோவில் இருக்கின்ற மேல்தட்டு வர்க்கத்திற்கு எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்று ஒவ்வொருவரும் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டு ஒவ்வொரு நிமிடமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்!  காரணம் லஞ்சம், ஊழல்,  வரவுக்கு மேல் செலவு, லண்டனில் ஷாப்பிங், பாரிசில் பசியாறல் என்று சுகபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களுக்கு இப்போது புகலிடம் ஒன்றே ஒன்று தான். அது தான் டாக்டர் மகாதிரின் பெர்சாத்து கட்சி!

ஆனாலும் பெர்சாத்துவில் அவர்கள் வரவேற்கப்படுகிறார்களே தவிர  அவர்களின் ஊழல்கள் வரவேற்கப்படவில்லை! அதனை அவர்கள் ஊழல் தடுப்பு ஆணையத்தில் நிருபித்து நல்ல சுதந்திர மனிதராக பெர்சாத்துவில் வலம் வரலாம். ஆனால் அம்னோவில் கிடைத்த அரவணைப்பு, மரியாதை எல்லாம் இங்குக் கிடைப்பது கடினம்.

அம்னோவுக்கு எதிர்காலம் உண்டா என்னும் கேள்விக்கு இப்போதே நாம் பதில் சொல்லலாம். எதிர்காலம் இல்லை என்றே சொல்லலாம்.  கட்சியை வழி நடத்த நம்பகமான தலைவர் இல்லை.  மக்கள் ஆதரவு பெற்ற தலைவர் இல்லை. பொதுவாக அம்னோவில் உள்ள தலைவர்களைத் திருடர்கள் என்று பார்க்கின்ற அளவுக்கு நிலைமை விபரீதமாகப் போய்விட்டது!

எதிர்காலம் இல்லை!

No comments:

Post a Comment