Saturday 6 October 2018

திருடுவது குற்றமா....?

திருடுவது குற்றமா என்னும் நிலைமைக்கு வந்துவிட்டனர் முன்னாள் பிரதமர் நஜிப்பின் குடும்பத்தினர்!

அமெரிக்காவில் உள்ள அவரது மகள் நூர்யானா நஜிப்  ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறார்!  அவரது தாயார் கைது செய்யப்பட்டிருப்பதைப் பற்றி கேள்விப்பட்டதும் அரசாங்கத்தைப் பார்த்து: நீங்கள் எல்லை மீறுகிறீர்கள்! என்பதாக.  திருடுவது குற்றம் என்பது பாலபாடம். ஒரு வேளை  திருடுவது குற்றம் இல்லை என்பதாக நூர்யானா வளர்க்கப்பட்டிருப்பாரோ! ஒன்றும் புரியவில்லை!

அவருக்குத் தாய் மேல் உள்ள பாசம் ஒரு வேளை அவரை அப்படிப் பேச வைத்திருக்கலாம். இன்று நஜிப் மேல் உள்ளக் குற்றசாட்டுக்களுக்கு மிகப் பெரிய காரணமே அவருடைய மனைவி ரோஸ்மா தான் என்பதாகத்தான் மலேசியர்கள் நம்புகின்றனர். ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்பது நமது அனுபவமொழி.  பெண்களிடமிருந்து ஆக்ககரமான செய்திகளே அதிகம். ஆனால் ரோஸ்மா மாபெரும் அழிவு சக்தி. தானும் தன் குடும்பமும் வாழ எதை வேண்டுமானாலும் செய்வார் என்பதை அவரின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன.

அமெரிக்காவிலுள்ள தனது  மகனுக்கு சினிமா படம் எடுக்க அவ்ர் உதவி செய்திருக்கிறார். அதே வேளை தனது மகள் நூர்யானவுக்கும் வேறு வழிகளில் அவர் உதவிகளை வழங்கியிருப்பார்.  அதனால் தான் நூர்யானாவுக்கு அம்மா மேல் பாசம் பொங்கி வழிகிறது!  அம்மா ஒரு தங்கச் சுரங்கம். பாசம் எழுவது இயல்பு தான்.

ஆனாலும் திருடுவது குற்றம் என்பது தான் நாமறிந்த உண்மை. அதற்கு வேறு வியாக்கியானம் இல்லை. தாய் தனது மகளுக்குத் திருடியாவது உதவி செய்கிறாள் என்றால் அது பிள்ளைப் பாசம் தான் காரணம். ஆனால் அந்த உதவி யாருக்குப் போய் சேர்ந்தாலும் அது திருடு திருடு தான்.  பிள்ளைகள் அதனை மறுக்க வேண்டுமே தவிர வாழ்த்தி வரவேற்கக் கூடாது. இது ஒரு குடும்பத்தின் வருங்காலத் தலைமுறையினரை திருடர் கூடாரமாக  மாற்றிவிடும்.

நூர்யானா பேசுவது தாய்ப்பாசம். ஆனால் தாய் தவறான வழியைப் பின் பற்றுகிறார் என்றால் அதற்கு மகள்  வக்காளத்து வாங்கக் கூடாது. அதைவிட பேசாமல் இருப்பதே மேல். 

சட்டம் தனது கடமையைச் செய்யட்டும். இது வரை எதுவும் மெய்ப்பிக்கப்படவில்லை. அப்படியே ஆகட்டும்!

No comments:

Post a Comment