Thursday 11 October 2018

இலக்கை அடைவரா...?

நாளை சனிக்கிழமை 13-தேதி (13-10-2018) போர்ட்டிக்சன் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் ஜெயிக்கப் போவது யாரு என்று கேள்விகள்  எல்லாம் தேவையில்லை!

அன்வார் வெற்றி பெறுவார் என்பதில் எந்த ரகசியமும் இல்லை. அவர் வெற்றி பெறுவது உறுதி. இப்போது பேசப்படுவதெல்லாம் எத்தனை வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெறுவார் என்பது தான்.  

சென்ற 14-வது பொதுத் தேர்தலின் போது அதன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டேனியல் பாலகோபலன் 17,000 வாக்கு வித்தியாசத்தில் அந்தத் தொகுதியில் வெற்றி பெற்றார். அதுவே பெரிய வெற்றி தான். 

ஆனால் இப்போது அந்தத் தொகுதியில் நிற்கும் வேட்பாளர் சராசரியான ஆளாக நாம் எடுத்துக் கொள்ள முடியாது.. அவர் அடுத்த மலேசியப் பிரதமர். டாக்டர் மகாதிர் பதவி ஓய்வுக்குப் பிறகு பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளப் போகிறவர். அதனால் அவரது வெற்றி என்பது உறுதி என்றாலும் அவரது வெற்றி என்பது எத்தனை ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் என்பதும் முக்கியம். அந்தப் பெரிய வித்தியாசம் தான் அவரைப் பிரதமராக மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பதற்கான அடையாளமாக எடுத்துக் கொள்ளப்படும்.

பொதுவாகவே இடைத் தேர்தல்களில் வாக்களிப்பவர்கள் குறைவாகவே இருப்பர். வாக்களர்கள் யார் வெற்றி பெறுவார் என்பதை முன் கூட்டியே ஓரு முடிவு செய்து வைத்திருப்பர். வெற்றி உறுதி என்பது தெரிந்த பின்னர் வாக்களிப்பதில் அக்கறை இன்றி இருப்பர். இப்படி அக்கறை இன்றி இருப்பவர்கள் மட்டும் சுமார் முப்பது நாற்பது விழுக்காடு வாக்காளர்கள் என்பது தேர்தல் ஆணையத்தின் கணக்கெடுப்புக் கூறுகிறது!

ஆக, ஒவ்வொரு இடைத் தேர்தலிலும் குறைவான வாக்காளர்களே வாக்களிக்கிறார்கள். சுமார் அறுபது, எழுபது விழுக்காடு வாக்காளர்கள். அதிலும் இப்போது மழைக்காலம் வேறு!    வாக்களிக்கும் மக்கள் இன்னும் குறையுமோ என்னும் ஐயமும் உண்டு.

ஆனாலும் அன்வார் முழு மூச்சாக தனது பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். யாரையும் விட்டு வைக்கவில்லை. எந்த இடையூறுகளையும் எதிர்கொள்ளத் தயாராய் இருக்கிறார்.  ஆடுகிறார்!  ஓடுகிறார்! பாடுகிறார்!

அவருடைய வாக்கு இலக்கு என்னவாக இருக்கும்?  முப்பதாயிரத்தை எட்டினால் ....நமக்கும் மகிழ்ச்சி தான்!

No comments:

Post a Comment