Monday 29 October 2018

மருமகனுக்கு சீதனம் ...!


பகாங் , சாபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜு,   இந்த சமுதாயம் போகிற போக்கைப் பார்த்து புலம்பியிருக்கிறார்! நமக்கும் வேதனை தான்.

நீங்கள் இரண்டு தடவை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். இந்நேரம் நமது மக்களைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். இருந்தாலும் இது ஒன்றும் அதிசயமல்ல.

நம்மிடையே ஒரு சில 'கஞ்சத்தின் உச்சம்'  என்று சொல்லக்கூடிய மனிதர்கள் இருக்கிறர்கள்! இது ஒரு வகை மனித இனம். யாருடனும் ஓட்டாதவர்கள்! எங்குப் பணம் கிடைக்குமோ அங்கு ஓட்டிக் கொள்ளுபவர்கள். சந்தர்ப்பவாதிகள்!  பணம் தான் அவர்களின் இலக்கு. பணத்திற்காக ஆயிரம் முறை காலில் விழுவார்கள்! ஆயிரம் முறை கூழைக் கும்பிடு போடக் கூட  தயங்கமாட்டார்கள்!

எதைப் பற்றியும் கவலைப்படாத மனிதர்கள் இவர்கள். நமது இனம், நமது மொழி, நமது பண்பாடு, நமது கலாச்சாரம் என்றெல்லாம் அவர்களிடம் பேச முடியாது.எல்லாவற்றிலும் இலாப நஷ்டம் பார்ப்பவர்கள்!  ஒவ்வொன்றிலும் தங்களுக்கு என்ன இலாபம் என்று பார்ப்பவர்கள்! 

ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி பணம் வசூல் செய்பவர்கள். பணம் பிடுங்குவதற்கு ஒரு சிறிய ஓட்டை கிடைத்தால் போதும் அங்குப் புகுந்து விடுவார்கள்! 

இது தான் நடந்திருக்கிறது சட்டமன்ற உறுப்பினர் காமாட்சிக்கு. இது அவருக்கு முதல் அனுபவம். என்ன நடந்தது? நான் மேல் சொன்ன மனித ஜென்மம் ஒன்று அவரின் மருமகனுக்கு  தீபாவளி சீதனம் கொடுக்க வேண்டுமாம் அதற்குப் பணம் கேட்டு சட்டமன்ற உறுப்பினரை நாடியிருக்கிறார் அந்த மனிதர்!

நாம் என்ன பிரச்சனைகள் இல்லாத சமுதாயமா? கல்விக்குப் பணம் கேட்கலாம். ஏழை, எளியவர் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் சாப்பாட்டுக்கு  உதவி கேட்கிறார்கள். வேலையில்லாமல் திண்டாடுபவர்கள் உதவி கேட்கிறார்கள். நோயோடு போராடும் கணவன் மனைவி ஒரு வழியும் இல்லாமல் உதவி கேட்கிறார்கள். நமது பிரச்சனைகள் கொஞ்சமா, நஞ்சமா?

ஆனால் மாப்பிளைக்குச் சீதனம் செய்யப் பணம் வேண்டுமென்றால் என்ன செய்யலாம்? அந்த மனிதரை என்ன செய்யலாம்? இவர்கள் வெட்கம் கெட்டவர்கள். யாரிடம் வேண்டுமானாலும் பண உதவி கேட்பார்கள்! மலாய், சீனர் இப்படி எந்தச் சட்டமன்ற உறுப்பினரிடமும் அவர்களிடம் போக இவர்கள் தயங்கமாட்டார்கள்.

இந்த மனிதர்கள் ஒன்றுமில்லாதவர்கள் என்று நாம் ஒரு முடிவுக்கு வரக்கூடாது!  இவர்கள் பணம் உள்ளவர்கள். ஆனால் மற்றவர்கள் கஷ்டம்,நஷ்டம் பற்றியெல்லாம் இவர்களுக்குக் கவலையில்லை. அவர்கள் அப்படித்தான் வளர்க்கப்பட்டவர்கள். அப்படித்தான் இருப்பார்கள்.

இனி இது போல யாரேனும் வந்தால் ஒன்று சொல்லலாம். மருமகனைக் கூட்டிக் கொண்டு வா நாங்களே சீதனம் கொடுக்கிறோம்! வேறு என்ன சொல்ல?

No comments:

Post a Comment