Wednesday 17 October 2018

ஏன் இந்த பிரிவினை...?

சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களுக்குச் சிறப்பு விசா கட்டணம் வழங்க வேண்டும் என்பதாக மலேசிய ஐயப்ப சேவை சங்கம் இந்திய தூதரகத்திடம் மனு ஒன்றைச் செய்திருப்பது   நல்ல செய்தி.

ஆனால் ஒரு செய்தி நமது மனதை நெருடுகிறது. அது ஏன் ஐயப்ப பக்தர்களுக்கு மட்டும்?  இப்படியும் யோசிக்கலாம் அல்லவா?  ஏன் மலையாளிகள் தங்களின் நலனில் மட்டும் அக்கறை காட்டுகிறார்கள்? தங்களின் கேரள மாநிலத்தை மட்டும்  முன் நிறுத்துகிறார்கள்?

இந்தியாவை ஒரு புண்ணிய பூமி என்பார்கள். அங்கு சபரிமலை மட்டும் இல்லை. திருப்பதி மலை உண்டு, பழனி மலை உண்டு. பஞ்சாபில்  பொற்கோவில் உண்டு. வேளாங்கண்ணி கோவில் உண்டு. நாகூர் தர்கா உண்டு. பௌத்த சமயத்தைச் சேர்ந்த சில புண்ணிய இடங்கள்.  இப்படி இன்னும் பல திருத்தலங்கள் உண்டு.  திருத்தலங்கள் நிறைந்த பூமி இந்திய மண்.

இந்த நிலையில் ஐயப்ப கோவிலை மட்டும் முன் நிறுத்தி "எங்களுக்கு மட்டும் விசா கட்டணத்தைக் குறையுங்கள்" என்பது மிகவும்கேவலமான ஒரு செயல். இந்தியத் திருத்தலங்களுக்குப் பயணம் செய்யும் யாத்ரிகர்கள் அனைவருக்கும் சிறப்பு விசா கொடுங்கள் எனக் கேட்கலாம். அப்படித்தான் கேட்க வேண்டும்.  இப்படிக் கேட்பதால்  அனைத்து யாத்ரீகர்களும் பயன் அடைவார்கள். 

இப்படி ஐயப்ப பக்தர்கள் மட்டும் என்றால் இது ஒரு விளம்பரமாகத் தான் அமையும். கேரளாவுக்கு விளம்பரம் செய்வதாகத் தான் அமையும்.  அப்படி என்றால் மற்ற இந்திய மாநிலங்களுக்குச் செல்லாதீர்கள் கேரளாவுக்கு மட்டும் வருகை தாருங்கள் என்று இவர்கள் சொல்ல வருகிறார்களா?  அதுவும் வெளி நாடுகளிலிருந்து  கொண்டு கேரளாவுக்கு இலவச விளம்பரம் தருகிறார்களா?  அது பற்றி நமக்குக் கவலை இல்லை. தந்துவிட்டுப் போகட்டும்.  கேரளா கடவுளின் பூமி என்று பெயர் பெற்ற பூமி. அங்குப் போவதற்கு யாருடைய சிபாரிசும் தேவை இல்லை. 

நாம் சொல்ல வருவதெல்லாம் எல்லாவற்றையும் குறுகிய கண்ணோட்டத்தோடு பார்க்காதீர்கள் என்பது தான். மலையாளிகளுக்கு மட்டும் என்னும் குறுகிய மனம் வேண்டாம். ஒவ்வொரு மாநிலத்திலும் நிறைய திருத்தலங்கள் உண்டு. அவர்களும் குறைந்த விசா கட்டணத்தில் போய் அந்த திருத்தலங்களைச் சென்று தரிசிக்கட்டும்.

நமக்குள் பிரிவினை வேண்டாம். பிரித்தது போதும் இனியாவது ஒற்றுமையாக வாழ விடுங்கள்!

No comments:

Post a Comment